சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் கபில் சிபலை நீக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் மததிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நேற்றும், இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் இந்த நியாயமான கோரிக்கையையும், அதற்காக நடத்தப்படும் போராட்டத்தையும் பாமக ஆதரிக்கிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக கபில்சிபல் பதவியேற்ற நாளில் இருந்தே சீர்திருத்தம் என்ற பெயரில் சமூக நீதிக்கும், சாதாரண மக்களின் கல்வி பெறும் உரிமைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை கபில்சிபலுக்கு உள்ளது.
ஆனால் அதை செய்ய மறுக்கும் அவர், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இந்தியாவின் கதவுகளை திறந்துவிட்டு, அவற்றிற்கு வெண்சாமரம் வீசும் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார்.
இந்தியாவில் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன்களுக்கு எதிரான 4 சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications