தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து: ரூ.25 லட்சம் சேதம்

தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்களில் மொத்தம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மின் உற்பத்திக்காக கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரியை துறைமுகத்தில் உள்ள கரிதளத்தில் இருந்து நேரடியாக அனல் மின் நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக இரண்டு கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் நிலக்கரி, அனல் மின் நிலையத்தில் உள்ள பிரைமரி கிரஷர் ஹவுஸ் மற்றும் செகன்டரி கிரஷர் ஹவுஸ் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு நிலக்கரி உடைக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் விதமாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் இங்கு கடந்த 3ம் தேதி அதிகாலையில் 47, 48வது பெல்டுகளில் திடீர் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இதில் நிலக்கரி கன்வேயர் பெல்ட் மற்றும் மின் மோட்டார்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
இந்த தீயினால் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை இங்கு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்லும் பிரைமரி மற்றும் செகன்டரி கன்வேயர் பெல்ட் யூனிட்களுக்கு இணைப்பாகவும், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு நிலக்கரியை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தெர்மல் நகர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கன்வேயர் பெல்ட் மற்றும் மின்மோட்டர்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தால் ஏற்பட்ட சேதமதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications