ஓட்டை மாத்திப் போடக் கூடாது... எம்.பிக்களுக்கு சோனியா எச்சரிக்கை!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தனது கட்சி எம்.பிக்களை சந்தித்து, யாரும் வாக்கை மாற்றிப் போடக் கூடாது என்று அறிவுறுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் தத்தமது ஆதரவுக் கட்சிகளிடம் ஓட்டு வேட்டையாடி வந்தனர். இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களை இன்று தனது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். ஒவ்வொரு மாநிலமாக அவர் அழைத்துப் பேசினார். அப்போது யாரும் கட்சி முடிவை மீறி வேறு யாருக்கும் ஓட்டளிக்கக் கூடாது என்று சோனியா வலியுறுத்தியதாக தெரிகிறது.
யாராவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கட்சி எம்.பிக்களை எச்சரித்ததாக தெரிகிறது.
கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி இந்தக் கூட்டம் நடந்தது. எப்படி வாக்களிப்பது என்பது குறித்து சோனியா காந்தி விவரித்தார்.
யாரும் கட்சி மாறி வாக்களிக்கும் வாய்ப்பில்லை. அனைவரும் பிரணாப் முகர்ஜிக்கே வாக்களிப்பார்கள். எதிர்க்கட்சியிலிருந்து வேண்டுமானால் எங்களுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்றார்.
இன்று மாலை தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் சோனியா காந்தியைச் சந்திக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications