3 கல்யாணம் போதாது என்று 4வதாக இன்னொருவருக்கு கட்டி வைக்க பெற்றோர் முயற்சி: மகள் புகார்!!!
சேலம்: இதுவரை தமிழகம் கண்டிராத விசித்திரமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர், தங்களது மகளுக்கு 4வது கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பதாக ஒரு நூதனப் புகார் வந்துள்ளது. இந்தப் புகாரை மகளே கூறியதால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாகிப் போனது.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு 23 வயதான கலாதேவி என்பவர் தனது கணவர் தியாகராஜனுடன் வந்திருந்தார். தனது 11 மாத கைக்குழந்தையுடன் வந்த கலாதேவி அங்கு நடந்த குறை தீர்ப்புக் கூட்டத்தில் தனது பெற்றோர் மீது பரபரப்புப் புகார் கூறினார்.
கலாதேவி கூறிய புகாரை அவரது வாயாலேயே கேளுங்கள்...
முதல் கல்யாணம் - ஆண்மை இல்லை
எனக்கு 14 வயது இருக்கும்போது கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சில நாட்களில் அவருக்கு ஆண்மை இல்லை எனக்கூறி, அரும்பனூரை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். 2-வது கணவருக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளான். அவனுக்கு தற்போது 9 வயது ஆகிறது.
2, 3வது கல்யாணம் மூலம் தலா ஒரு மகன்
சில ஆண்டுகளில் 2-வது கணவரிடம் இருந்து என்னை பிரித்து, 3-வதாக தியாகராஜனுக்கு பெற்றோர் என்னை திருமணம் செய்து வைத்தனர். இவர் மூலம் எனக்கு தருண் என்ற 11 மாத குழந்தை உள்ளது. 2-வது கணவர் மூலம் பிறந்த மகனும் எங்களுடன்தான் இருக்கிறான்.
4வது கல்யாணத்திற்கு முயற்சி
தற்போது 4-வதாக சொத்துக்கு ஆசைப்பட்டு தர்மபுரியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் முயற்சித்து வருகிறார்கள் என்றார்.
பின்னர் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்ப்பு முகாமில் எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்தார் கலாதேவி. அதில்,
என் கணவர் தியாகராஜனுக்கு நல்ல வருவாய் இருந்தது. இதனால் அவரது வருமானத்தில் ரூ.7 லட்சத்தை எனது தாய், தந்தை வீட்டு கடனை அடைக்கவும், அண்ணன்கள் திருமணத்தை நடத்தவும் கடனாக வாங்கி கொடுத்தேன். எனது பெற்றோர் என்பதால் கொடுத்த பணத்திற்கு ஆதாரம் பெற்று கணவரிடம் கொடுக்கவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்தேன்.
என் பெற்றோரிடம் பலமுறை அந்த பணத்தை திரும்ப கேட்டும் கொடுக்கவில்லை. எனது உறவினர்கள் சென்று கேட்டதற்கு, எனது மருமகன்(தியாகராஜன்) என் மகளிடம் உல்லாசமாக இருந்ததற்கு அந்தப் பணம் சரியாகி விட்டது. என் மகள் என்னிடம் வந்துவிடட்டும். நான் 4-வதாக வேறு திருமணம் செய்து வைத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளனர்.
கடந்த 14.5.2012 அன்று மாவட்ட எஸ்.பியிடம் எனது தாய்-தந்தை மீது புகார் கொடுத்தேன். அந்த புகார் மனு மீது கெங்கவல்லி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி, நான் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி திரும்ப அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் என் பெற்றோர், உன் கணவர் தியாகராஜனிடம் இருந்த ரூ.7 லட்சத்தை நாங்கள் பெற்று கொண்டோம். இனி அவனிடம் வசதி ஒன்றுமில்லை. எனவே, நீ எங்களோடு வந்துவிடு. வசதியான இடத்தில் உனக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறோம் என்று கூறினர். ஆனால் நான் மறுத்து விட்டேன்.
நாங்கள் தற்போது மிகவும் கஷ்டநிலையில் உள்ளோம். எனவே, என் பெற்றோர் நம்பிக்கையின்பேரில் பெற்ற ரூ.7 லட்சம் கடனை திரும்ப தந்தால்தான் நாங்கள் வாழமுடியும். எனவே, என் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்து என்னையும், குடும்பத்தையும் காப்பாற்றுமாறு வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.
பெற்றோர் தனக்கு 4வது கல்யாணம் செய்ய முயற்சிப்பதாக மகள் கொடுத்த புகாரால் சேலம் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.












Click it and Unblock the Notifications