எந்த அமைச்சர் பொறுப்பு வகித்தால் ஓட்டு அறுவடை அமோகமாக இருக்கும்? தீவிர கால்குலேஷனில் ராகுல்

- உள்துறை அமைச்சகம் என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. உதாரணமாக் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் விவகாரம், மாவோயிஸ்டுகள் பிரச்சனை போன்றவற்றை இளவரசர் ராகுல்காந்தி தாங்க மாட்டார்.
- நிதித்துறை அமைச்சர் பொறுப்பேற்றால் மானியக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. போதாக்குறைக்கு பொருளாதார மந்தநிலை வேறு. நிச்சயம் கெட்டபெயர்தான் கிடைக்கும்.
- வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு என்பது ரொம்ப பாதுகாப்பானதுதான். வெளிநாடுகளில் நல்ல மரியாதையெல்லாம் கிடைக்கும். ஆனால் உள்நாட்டு அரசியலில் ராகுலுக்கு எப்படி கை கொடுக்கும்? பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடட்த்தி தீர்வு கண்டால்தான் ஓரளவு அரசியல் செய்ய முடியும். ஆனால் அது நடக்கிற காரியம் அல்ல.
-- பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்பதும் ரொம்பவும் பாதுகாப்பானதுதான். தேசப்பற்று, தேசியம்னு பேசி இமேஜ் பில்டப்புக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருக்கும் ஊழல் பஞ்சாயத்துகள், ஆயுதப் பற்றாக்குறை விவகாரம் எல்லாம் கொஞ்சம் யோசிக்க வைக்கலாம். அதுவும் எந்த ராணுவ ஊழல் வந்தாலும் ராகுலின் அப்பா காலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைத்தான் முன்னுதாரமாகக் காட்டப்படுவதால் அதை விரும்பவில்லையாம்..
- சட்டம், கம்பெனி விவகாரங்கள், மனித வளம், தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் மூல எந்த ஒரு அரசியல் ஆதாயமும் கிடைக்காது என்பதால் எடுத்த எடுப்பிலேயே ராகுல் ரிஜெக்ட் செய்துவிட்டாராம்..
- ஊரக மேம்பாட்டுத் துறை மற்றும் வேளாண்துறை அமைச்சகப் பொறுப்புகளை தம் வசம் வைத்தால் ஏதாவது நாலு நலத் திட்டங்களை அள்ளிவிட்டு ஓட்டுக்களை வாங்கிவிடலாம். அரசாங்கப் பணத்தை வாரியிறைத்து நோகாமல் ஓட்டு வாங்கிவிடலாம் என்று கணக்குப் போடுகிறாராம் ராகுல். குறிப்பாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொஞ்சம் ஒட்டடையடித்து சரியான ஓட்டாக மாறும் வழிகளை உருவாக்கினால் ஜெயம்தான் என்பதுதான் ராகுலின் கணக்காம்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு கைகொடுத்தது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்தான் என்கிற நம்பிக்கையில் இந்த முடிவில் இருக்கிறாராம்!
-சரி இது இல்லையெனில் அடுத்து உணவு விநியோகம் மற்றும் வேளாண்துறை அமைச்சர் பொறுப்புகள்தானாம்! இரண்டும் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் பிரிக்கப்பட்டது. வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத்பவார், அவர் தம் பங்குக்கு ஒரு கால்குலேஷன் போட்டுக் கொண்டு பஞ்சாயத்து பேசிவருவதால் அதில் கைவைக்க ராகுல் விரும்பவில்லையாம். அதுமட்டும் இல்லாமல் பருவமழையும் சரியாக இல்லாத நிலையில் வேளாண் துறை வளர்ச்சியும் வீழ்ந்து கிடப்பதால் ஆகவே..ஆகாது என்கிற மூடில் இருக்கிறாராம் ராகுல்காந்தி.
- இதனால் பேசாமல் உணவு விநியோகத்துறை அமைச்சகப் பொறுப்பை எடுத்துக் கொண்டால் என்ன என்று நினைக்கிறாராம். உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்படுவது பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் 70 சதவீத மக்களுக்கு சீரான உணவு மானியத்துக்கு வழி ஏற்படும். மேலும் 3 ரூபாய்க்கு 25 கிலோ அரிசியும் 1கிலோ கோதுமை ரூ2க்கும் மற்ற தானியங்கள் ரூ1க்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் யோசனை. கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகப்படுத்திய உணவு பாதுகாப்பு மசோதாவின் படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு இது 15 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த மசோதாவிற்கு வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் வாக்கு வங்கிகளை பெருமளவில் கவரக் கூடிய உணவு பாதுகாப்பு மசோதாவை நேர்த்தியாக ராகுல்காந்தி அமைச்சராக பொறுப்பேற்கும் காலத்தில் சீரமைத்து நிறைவேற்றினாலே இதை வைத்தே வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறராம். வறட்சி தாண்டவமாடும் காலத்தில் பாலைநிலத்தில் பால் வார்த்ததுபோல் பக்குவமாக செய்து ஓட்டு அறுவடையை அமோகமாக செய்துவிடலாம் என்கின்றனர் காங்கிரசார்.
இதனால் அனேகமாக ராகுல்காந்தி உணவு விநியோகம் அல்லது ஊரக மேம்பாடு என்னும் ஓட்டு அறுவடைக்குப் பயன்படக் கூடிய அமைச்சர் பொறுப்புகளை வகிக்கக் கூடும் என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications