மகாராஷ்டிர 'மகா' ஊழல்கள்: சரத் பவாருக்கு நெருக்கடி.. மத்திய அரசிலிருந்து விலக முடிவு?

முதல்கட்டமாக தனது கட்சியின் மத்திய இணையமைச்சரான அகதா சங்மாவை (இவர் பி.ஏ.சங்மாவின் மகள்) அமைச்சர் பதவியை கவனிக்க வேண்டாம் என்றும், அலுவலகத்துக்குச் செல்ல வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார் பவார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சராக உள்ள சரத் பவார் தனக்கு அமைச்சரவையில் நம்பர் டூ இடம் தரப்படாததால் கடும் எரிச்சலடைந்துள்ளார். மேலும் மகாராஷ்டிரத்தில் நடக்கும் கூட்டணி ஆட்சியிலும் தனது கட்சிக்கு காங்கிரஸ் முக்கியத்துவத்தைக் குறைத்து வருவதாகவும் பவார் கருதுகிறார்.
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் தனது அமைச்சர்களுக்கு முக்கிய பதவிகளைக் கோரும் அவர், தனது உறவினரான அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி கோருவதாகவும் தெரிகிறது.
மேலும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் மகாராஷ்டிரா சதன் கட்டட பணிகளில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கட்டதத்தைக் கட்டும் நிறுவனத்தில் மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சகன் புஜ்பாலின் குடும்பத்தினர் நிர்வாக உறுப்பினர்களாக உள்ளனர். இதையடுத்து இந்தக் கட்டட ஊழல் குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் முதல்வர் பிரிதிவிராஜ் சவான் விசாரணையை ஆரம்பித்துள்ளார். இதுவும் பவாரை எரிச்சலாக்கியுள்ளது.
மேலும் தேசியவாத காங்கிரஸ் வசம் உள்ள மகாராஷ்டிர நீர்வளத்துறையிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2009மம ஆண்டு முதல் இந்தத் துறையை கையில் வைத்திருக்கும் பவாரின் கட்சி அமைச்சர்கள் இதுவரை அணைகள் கட்ட ரூ. 70,000 கோடி செலவிட்டுள்ளனர். ஆனால், இதனால் 0.1 சதவீத கூடுதல் நிலமே பாசனம் பெற்றுள்ளது.
இதையடுத்து இது குறித்து முதல்வர் சவாணே வெள்ளை அறிக்கை கோரியுள்ளார். இது பவாரை கடும் கோபத்துள்ளாக்கியுள்ளது.
இந் நிலையில் இன்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளிக்கிறார். ஆனால், இதில் பவார் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவிலேயே மத்திய அரசிலிருந்து விலகி வெளியில் இருந்து ஆதரவு தரும் அறிவிப்பை சரத் பவார் வெளியிடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications