நேதாஜியின் படையில் இருந்த இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை லக்ஷ்மி சேகல் மரணம்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப் படையில் முதல் பெண் கமாண்டராக பணியாற்றியவர் லக்ஷ்மி சேகல். சென்னையில் பிறந்த அவர், கடந்த 1938ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார்.
அதன்பிறகு சிங்கப்பூருக்கு சென்ற லக்ஷ்மி சேகல், அங்குள்ள இந்தியர்களுக்காக இலவச மருத்துவமனை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 1943ம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸை சந்தித்தார். இவரிடம் இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை குறித்து சுபாஷ் சந்திரபோஸ் பேசினார்.
சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்தின் மூலம் கவரப்பட்ட லக்ஷ்மி, தன்னை இந்திய ராணுவத்தில் இணைத்து கொண்டார். அதன்பிறகு இந்திய ராணுவத்தில் முதல் பெண் கமாண்டராக பணியாற்றிய இவர், 1947ம் ஆண்டு கர்னல் பிரேம் குமார் சேகலை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கான்பூரில் குடியேறிய இவர், டாக்டர் தொழில் செய்து வந்தார்.
கடந்த 1971ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த லக்ஷ்மி, கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் அப்துல் கலாம் வெற்றி பெற்றார்.
கேப்டன் லக்ஷ்மி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த இவர், கடந்த 18ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் இவரது நிலை நேற்று மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றது.
இதனையடுத்து இன்று காலை 11.20 மணி அளவில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அளிக்கப்பட்டதால், அவருக்கு இறுதி சடங்கு நடைபெறாது என்று அவரது மகள் சுபலக்ஷ்மி அலி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications