வறண்டன ஒகேனக்கல் அருவிகள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒகேனக்கல்: பருவ மழை குறைவு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நேற்று ஒகேனக்கல் அருவியில் நீராட வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலம் ஒகேனக்கல். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை குறைவாக இருப்பதால், தற்போது ஒகேனக்கல் அருவிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நேற்று அருவியில் நீராட வந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் ஆங்காங்கே குட்டை போல இருந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீராடி சென்றனர். மேலும் சினி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி, தொங்கு பாலம், பார்வை கோபுரம், முதலைப் பண்ணை ஆகிய இடங்களில் இருந்தவாறு, ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்தனர்.
வழக்கமாக ஆடி பெருக்கின் போது, ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் ஜூலை மாதத்தில் ஒகேனக்கல் அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை குறைவு காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பரிசல் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications