மத்திய அரசு தலையிடாதவரை தமிழக மீனவர்களுக்கு விமோச்சனம் இல்லை... ஜெ. காட்டம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல், பிடித்துச் செல்லுதல் போன்றவற்றைத் தடுக்க இந்திய அரசாங்கம், இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதம்:

கடந்த 22-ந் தேதியன்று, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைப் பிடித்து கைது செய்த மேலும் ஒரு சம்பவத்தை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த (ஜுலை) மாதத்தில் 15 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 22-ந் தேதி ஐந்து விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். தலைமன்னார் போலீஸ் காவலில் இருந்த 23 மீனவர்களும் தற்போது 2 வாரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே பழங்காலந்தொட்டு மீன்பிடித்து வரும் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். நான் தங்களுக்கு எழுதிய முந்தைய கடிதங்களில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, கடந்த 2 மாதங்களில் குறிப்பாக மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்துவது, கைது செய்வது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன.

தமிழக மீனவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்கள் பழங்காலந்தொட்டு மீன்பிடித்து வரும் கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடுப்பதுதான் இலங்கை கடற்படையினரின் நோக்கம் என்பதையே மேற்கண்ட கைது சம்பவம் காட்டுகிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த செயல்கள், மீனவர்களின் மனதில் மனரீதியான அச்சத்தை உண்டாக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், கடலில் தங்களது உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை என்று நினைக்கிறார்கள்.

இந்திய - இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும்போது மட்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைப் பிடித்து துன்புறுத்துதல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறது. அதன்பிறகு உடனடியாக இலங்கை கடற்படை தனது நடவடிக்கைகளை மீண்டும் செய்யத் தொடங்கிவிடுகிறது. இத்தகைய செயல் தமிழக மீனவர்களுக்கு பெரும் துன்பத்தைக்கொடுக்கிறது.

பாக் ஜலசந்தியை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களைத்தான் இலங்கை கடற்படையினர் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இதனால், மீன்பிடித் தொழிலை மட்டும் தெரிந்துவைத்துள்ள மீனவர்கள் தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க முடியாமல் போகிறது.

எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் வைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 5 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்து, தமிழகத்திற்கு வேகமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் அந்நாட்டு கடற்படைக்கு அறிவுறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இந்திய அரசாங்கம், இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+