துபாயில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடல் திருச்சி வந்தது: சொந்த ஊரில் தகனம்
திருச்சி: துபாயில் அமெரிக்க கடற்படையால் சுட்டுகொல்லப்பட்ட மீனவர் உடல் விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊருக்கு கொண்டு சென்று உடலை தகனம் செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் அரபு நாட்டு கம்பெனிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த வாரம் துபாய் கடலில் இவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க கப்பற் படையினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர் சேகர் பலியானார்.
அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதன் பயனாக, துபாயில் இருந்து விமானம் மூலம் சேகரின் உடல் புதன்கிழமை 3.50 மணிக்கு திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு வந்திருந்த சேகரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்துச்சாமி, சேகர் சுட்டுக்கொல்லப்பட்ட அன்றைய தினம் நானும் மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். சேகர் இருந்த கப்பலை ஓட்டிய அரேபிய கேப்டன், வேண்டுமென்றே அமெரிக்க கப்பலுக்கு வழிவிடாமல் சென்றார். இதனால் அமெரிக்க கப்பலில் இருந்த அதிகாரிகள் சேகர் இருந்த கப்பலுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக அமெரிக்க கப்பலில் இருந்து வானத்தை நோக்கி 6 முறை துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், அரேபிய கேப்டன் வழிவிடாமல் சென்றார். இதையடுத்தே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அமெரிக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய விவரம் முதலில் எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பின்னால் இருந்த கப்பலில் சென்று கொண்டு இருந்தோம் என்று கூறினார். இந்த சம்பவம் பற்றி இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தவுடனேயே உதவினார்கள். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார். இதனையடுத்து சேகரின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு சென்ற உறவினர்கள் அங்கு தகனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications