தண்ணி அடித்து விட்டு வேன் ஓட்டிய டிரைவர்.. ஆதரவாகப் பேசிய பள்ளிக்கூடம்- மக்கள் சரமாரி அடி!
திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கூட வேனை குடிபோதையில் ஓட்டிச் சென்ற டிரைவரை நிறுத்தி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து பள்ளிக்கூடத்திடம் போய் புகார் கூறியபோது டிரைவருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் பேசியதால் மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர்.
திருப்பூர் போயம்பாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருபவர் மேகநாதன். 47 வயதாகிறது. இவர் செட்டிப்பாளையம், தியாகிகுமரன் காலனி பகுதி மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக நேற்று காலை வேன் ஓட்டிச் சென்றார்.
அப்போது வேனை மேகநாதன் தாறுமாறாக ஓட்டிச் சென்றதாகவும், ரோட்டில் சென்ற வாகனங்கள் மீது வேன் உரசியபடி சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதை கவனித்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பள்ளி வேனை வழிமறித்து டிரைவரை என்ன ஏது என்று விசாரித்தனர். மேலும் மேகநாதன் குடிபோதையில் இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து வேனை மேலும் போக விடாமல் தடுத்து நிறுத்தினர். இதைப் பார்த்து பொதுமக்கள் கூடி விட்டனர். குடிபோதையில் பள்ளிக்கூட வேனை ஓட்டிய டிரைவர் மீது ஆத்திரமடைந்த அவர்கள், டிரைவரை கீழேஇறக்கி சரமாரியாக அடித்தனர். குறிப்பாக பெண்கள், மேகநாதனை அடித்தனர்.
தகவல் அறிந்ததும் பள்ளித் தாளாளர், முதல்வர் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்த பொதுமக்கள், இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் ஏன் வேலைக்கு வைத்துள்ளீர்கள் என்று கோபத்துடன் கேட்டனர் பொதுமக்கள். ஆனால் பள்ளி நிர்வாகிகளோ டிரைவருக்கு ஆதரவாகப் பேசினர். இதனால் பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்து பள்ளி நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து போலீஸாரும் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் மேகநாதனை மீட்டு அவர் ஓட்டி வந்த பள்ளிக்கூட வேனிலேயே அனுப்பி வைத்தனர்.
ஆனால் இதற்கு பொதுமக்களும், அவர்களுடன் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீஸார் டிரைவரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications