அஸ்ஸாமில் ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் இன மோதல்.. அஸ்ஸாம் விரையும் சிபிஐ டீம்!
டெல்லி: வன்முறை குறித்து விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு குழு டெல்லியில் இருந்து நாளை அசாம் செல்கிறது.
அசாம் மாநிலத்தின் கோக்ரஜார், சிராங், தூப்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி வன்முறை வெடித்தது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை 73 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில தினங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது.
அங்கு ஏ.கே. 47 துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல்கள் நடந்தது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதையடுத்து போடாக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் பணிகளில் பாதுகாப்புப் படைகள் இறங்கியுள்ளது.
இதையடுத்து கோக்ரஜார் மவாட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. மேலும் சிராங் மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்கள் குறி்த்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு சிபிஐ சிறப்பு குழுவை அசாமுக்கு அனுப்பி வைக்கிறது. இந்த குழு டெல்லியில் இருந்து நாளை அசாம் சென்று விசாரணை நடத்துகிறது.
இதற்கிடையே வன்முறை குறித்து கோகாய் கூறுகையில்,
அசாமில் வன்முறை சம்பவங்கள் சாதாரண விஷயம். அது நடக்கத் தான் செய்யும். அசாம் ஒரு எரிமலை போன்றது என்றார்.












Click it and Unblock the Notifications