ஹசாரே போய் ராம்தேவ் வந்தாரு, டும் டும் டும்.. காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கம்!

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், ஊழலுக்கு எதிராகவும் யோகா குரு பாபா ராம்தேவ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவங்கினார். முன்னதாக அவர் ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் ஊழலுக்கு எதிராக இதே ராம்லீலா மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தபோது மைதானம் கூட்டமில்லாமல் காற்று வாங்கியது. ஆனால் இன்று மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கிடையே ராம்தேவ் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்பேன் என்று மத்திய அமைச்சர் ரவாத் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னி்ட்டு மைதானத்தில் 30 டாக்டர்கள் அடங்கிய குழு தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 5 நுழைவாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. 500 கழிவறைகள் மற்றும் 300 குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனது போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ராம்தேவ் அன்னா ஹசாரேவுக்கு அழைப்புவிடுத்தார். ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்ள ஹசாரே மறுத்துவிட்டார்.
கடந்த முறை ராம்தேவ் இதே மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க வந்தபோது அவரும், அவரது ஆதரவாளர்களும் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications