காதலர்களைக் கொன்ற வழக்கு: வேதாரண்யம் தேமுதிக ஒன்றிய செயலாளர் மீது பாய்ந்தது குண்டாஸ்
நாகை: காதலர்கள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேமுதிக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு சேனாதிகாட்டைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் கரிஷ்மா (19). அவரும் ஆதனூரைச் சேர்ந்த ரத்தினம் மகன் சுதாகரும் (27) காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு கரிஷ்மாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி கரிஷ்மா பி.எட். படிப்பதற்கு விண்ணப்பம் வாங்கப் போவதாகக் கூறி சுதாகருடன் வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து கரிஷ்மாவின் அண்ணன் கந்தவேலுவும், அதே ஊரைச் சேர்ந்த சசிகுமாரும் காதலர்களை வீட்டில் சேர்த்து வைப்பதாகக் கூறி அவர்களை 4ம் தேதி ஊருக்கு அழைத்து வந்து தாணிக்கோட்டகம் அருகில் வைத்து அவர்களை இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கந்தவேல், சசிகுமார் ஆகியோரை வாய்மேடு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வேதாரண்யம் ஒன்றிய தேமுதிக செயலாளர் செல்லத்துரை தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்லத்துரையை வாய்மேடு போலீசார் கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நாகை மாவட்ட எஸ்.பி. இராமர் பரிந்துரையின்பேரில் செல்லத்துரையை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டார். இதைடுத்து செல்லத்துரை மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications