திருச்சி பாமகவில் கோஷ்டி மோதல்: கவலையில் கட்சி தலைமை
திருச்சி: திருச்சி பாமகவில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலால் கட்சி தலைமை கவலை அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திராவிட கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வளர்ந்து வந்துள்ளது பாமக. அதன் அபார வளர்ச்சியை கருத்தில் கொண்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பல்வேறு தேர்தலின்போது பாமகவை தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொண்டன.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் பாமக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் அறிவுச் செல்வனின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த ஒரு விபத்தில் அறிவுச் செல்வன் பரிதாபமாக பலியானார்.
இந்நிலையில் அவரது ஆதரவாளரான மாநகர் மாவட்டச் செயலாளர் திலிப் என்பவருக்கும், மாநில துணைத் தலைவர் கண்ணதாசனுக்கும் இடையே கடும் கோஷ்டி பூசல் தலை தூக்கியுள்ளது. இதனால் பாமக மாவட்ட தரப்பில் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து பாமக தலைமைக்கு கவலையுடன் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications