டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வினாத்தாளை இமெயிலில் அனுப்பியவருக்கு வலை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த பாலனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கான வினாத்தாள் ஏற்கனவே வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஈரோடு போலீசார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் விவேகானந்தன், ரங்கராஜ், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை தனக்கொடி, அவரது கணவர் செந்தில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் சுதாகரன், வரதராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் நாமக்கல்லில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரில் வைத்து தான் வினாத்தாளின் 880 பிரதிகள் காப்பி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இன்டர்நெட் சென்டர் உரிமையாளர் சசிகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வினாத்தாள் சென்னையில் இருந்து இ-மெயிலில் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலன் என்பவர் தான் வினாத்தாளை இமெயிலில் அனுப்பியுள்ளார். இதையடுத்து பாலனை கைது செய்ய ஈரோடு போலீசார் நேற்று இரவு சென்னை சென்றனர். பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் பாலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாலன் விரைவில் சிக்குவார் என்று மேற்கு மண்டல ஐ.ஜி. சுந்தரமூர்த்தி தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications