கேரளாவில் அதிகரிக்கும் 'குடி'மகன்கள்: மது விலக்கை அமல்படுத்த அரசுக்கு ஹைகோர்ட் அறிவுரை
திருவனந்தபுரம்: மது அருந்தும் பழக்கத்தை குறைப்பதற்காக கேரளாவில் மாலை 5 மணிக்கு மேல் பார்களை திறப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 14 வயது நிரம்புவதற்கு முன்பே சிறுவர்கள் மது அருந்தத் தொடங்குவதாக கேரளாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கேரளாவில் மது விற்பனை பல மடங்கு அதிகரி்க்கிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ராமசந்திரன் நாயர், அப்துல் ரஹீம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், கேரளாவில் பார்கள் மற்றும் மதுக்கடைகள் காலை 9 மணிக்கே திறக்கப்படுகின்றன. இது மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை அதிகரிக்கிறது. இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது. எனவே மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது அவசியம். முதல்கட்டமாக பார்களை மாலை 5 மணிக்கு மேல் திறந்து வைத்திருப்பது குறி்த்து கேரள அரசு ஆலோசிக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications