For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஊழல்: பிரதமர் ராஜினாமா கோரி நாடாளுமன்றத்தில் பாஜக தொடர்ந்து அமளி

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் நடந்துள்ள மாபெரும் ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றும் பிரச்சனை கிளப்பின. இதனால் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

நேற்று லோக்சபா தொடங்கியதும் பாஜக, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான மத்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தொடர்பாக பிரச்சனை எழுப்பினர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதால் அதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

அப்போது திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு தலைமையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலைக் கண்டித்துக் கோஷம் எழுப்பினர். அக் கட்சியின் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன், அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார்.

இதனால் ஏற்பட்ட பெரும் அமளியைத் தொடர்ந்து அவை ஒரு நிமிடத்திலேயே அதை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.

பின்னர் அவை கூடியதும் மீண்டும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பிரச்சனையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இதையடுத்து அவை நடவடிக்கையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

ராஜ்யசபாவில்..

அதே போல ராஜ்யசபாவிலும் காலையிலேயே நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தை பாஜக, இடதுசாரி கட்சிகள், அதிமுக, தெலுங்கு தேசம் கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பினர்.

அவர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கூச்சலிட்டனர். இதையடுத்து அவை தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே அதை துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

பின்னர் அவை கூடியதும், பாஜக எம்பி அருண் ஜெட்லி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தைக் கிளப்பினர்.

இதனால் அவையில் பெரும் அமளி நிலவியதால் ராஜ்யசபாவை நாள் முழுவதும் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

பலப்பரீட்சைக்கு தயாராகும் காங்கிரஸ்-பாஜக:

இந் நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பிரச்சனையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை கடுமையான பலப்பரீட்சைக்கு தயாராகி வருகின்றன.

இரு தரப்பினருமே இந்த பிரச்சனையில் விட்டுக் கொடுக்காமல், இறுதி வரை மோதிப்பார்த்து விடுவது என்ற வகையில் பலப்பரீட்சைக்குத் தயாராகி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் இன்று முதல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் பாஜக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை ஒன்றுபட்டு முறியடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளன.

இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்காத திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி, இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இது காங்கிரசின் வாழ்வா சாவா? பிரச்சனையாகும். இந்த பலப்பரீட்சையில் நாம் தோற்றுவிட்டால் அத்துடன் நம் கதை முடிந்து விடும். எனவே பிரதமர் மற்றும் மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் நிலைப்பாட்டை முறியடித்தே தீர வேண்டும் என்று, தனது பெயரை குறிப்பிட விரும்பாத மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

2வது நாளாக இன்றும் அமளி:

இன்று காலை லோக்சபா கூடியதும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரச்சனையை கிளப்பினர்.

பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், இந்தப் பிரச்சனை பற்றி பேச சபாநாயகர் மீராகுமார் அனுமதி மறுத்தார். மேலும் உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

இதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் இதே பிரச்சினையை கிளப்பியதால் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பாஜக ஆலோசனை:

இதற்கிடையே இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் எல்.கே.அத்வானி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்குப் பின் அத்வானி நிருபர்களிடம் பேசுகையில், இந்த அரசு நாட்டுக்கு களங்கமாகவும், பாரமாக அமைந்து இருக்கிறது என்றார்.

English summary
BJP on Tuesday refused to step down on its demand for Prime Minister Manmohan Singh's resignation on alleged irregularities in coal block allocations. The party said it would continue to press for the PM's removal in the wake of "regular occurrence" of scams. The face-off, which could hold up the ongoing monsoon session of Parliament, did not seem to be bothering the main opposition, which feels it is for the government to find an escape route out of the logjam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X