For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓணம் பண்டிகை: கேரள மக்களுக்கு ஜெ., கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மலையாள மக்கள் நாளை திருவோணப் பண்டிகையை கொண்டாடவிருக்கின்றனர். இதையொட்டி அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

திருவோணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமால், வாமன அவதாரம் பூண்டு மகாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி ஆண்டுதோறும் மக்களை தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார்.

அதன்படி மக்களைக் காணவரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

திருவோணம் பண்டிகையின்போது மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் பத்து நாட்களுக்கு அரிசி மாவினால் அழகிய கோலமிட்டும், அக்கோலத்தை வண்ணப் பூக்களால் அலங்கரித்தும், குத்து விள்ககேற்றியும் மனம் மகிழந்து கொண்டாடுவார்கள்.

இப்பண்டிகையின்போது ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும். ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இவ்வோணம் பண்டிகை உணர்த்துகிறது. இந்த இனிய திருநாளில் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி்க் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தி:

கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல், மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் ஓணம் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது. மாவீர மன்னன் மாபலிச் சக்கரவர்த்தியை ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால் கொன்றுவிட்டாலும் தான் நேசித்த மக்களிடம் மாறா அன்பு கொண்ட அந்த மாபலி மாமன்னனை எண்ணிக் கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் திருநாள் இனிய பண்பாட்டுத் திருநாளாகவும், அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

வண்ண வண்ண கோலங்கள் இட்டு கலை மணம் கமழ மலையாள மக்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம், சூழ்ச்சி, வஞ்சகம் முதலிய குணங்கள் அகற்றப்பட வேண்டும். அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத்தன்மை சகோதர நேயம் பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்களை பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பனவற்றை மனித சமுதாயத்திற்கு உணர்த்திடும் நன்னாளாகும்.

தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவரும் தம் உற்றார் உறவினர், நண்பர்கள் சூழ ஓணம் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக அவர்கள் நிறைந்து வாழும் தமிழகத்தின் எல்லையோரங்களில் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும்- சென்னை மாநகருக்கும் அரசு விடுமுறை வழங்கி கேரள மாநில மக்களின் உணர்வுகளை போற்றியது கடந்த கால திமுக அரசு என்பதை இத்திருநாளில் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.

தமிழ் சமுதாய மக்களுக்காக மட்டுல்லாமல் தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்கள் வாழ்விலும் எப்பொழுதும் உரிய கவனம் செலுத்திவரும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மலையாள மக்கள் அனைவர் வாழ்விலும் என்றும் வளம் குவிய நலம் பொலிய என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

கேரளாவை ஆட்சி செய்த மன்னர்களில் சிறந்த மாமன்னன் மாபலி சக்கரவர்த்தி ஆவார். அவர் கிருஷ்ணரிடம், தான் திருவோண நாள் அன்று கேரள மாநிலத்திற்கு வருகை தருகின்ற வரத்தை விரும்பி பெற்றார். அந்த மாமன்னர் தன்னுடைய மக்களை சந்திக்க வருகின்ற நாளே திருவோண நாளாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.

அந்த மக்கள் ஓணம் பண்டிகை என்று அழைத்து ஆண்டுதோறும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு பெற தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.

English summary
People of Kerala are clebrating Onam festival on wednesday. So, CM Jayalalithaa, DMK chief Karunanidhi and DMDK leader Vijayakanth have wished the people to have a great day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X