ஓசூர் சோதனை சாவடிகளில் அதிகாலையில் ரெய்ட்.. சிக்கியது லஞ்சப் பணம்
ஓசூர்: தமிழக-கர்நாடக எல்லையான ஒசூரில் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக பர்மிட் வழங்கவும் சோதனை சாவடி (இன்-கமிங் செக்போஸ்ட்) அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல சற்றுத் தொலைவில் சிப்காட் வளாகத்தின் அருகே தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்க ஒரு சோதனை சாவடி (அவுட்-கோயிங் செக்போஸ்ட்) அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயர்வது இந்த சோதனைச் சாவடிகள் வழியாகத்தான். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இதைக் கடக்கின்றன.
இந்த சோதனைச் சாவடிகளிலும், இதைத் தாண்டியதும் உள்ள கர்நாடகத்தின் சோதனைச் சாவடிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் வாங்கி குவித்து வருகின்றனர்.
வாகனங்களை நிறுத்தி பிடித்துத் தர இவர்களுக்கு புரோக்கர்கள் கூட உள்ளனர்.
இந் நிலையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் ஒரு குழுவினர் இன்று அதிகாலை 3 மணிக்கு ஓசூர் செக்போஸ்ட்களுக்கு வந்தனர்.
இன்கம்மிங் செக்போஸ்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ. 1.3 லட்சம் மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதாவது இரவு டூட்டிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்த செக்போஸ்டில் இருந்த ஆர்டிஓ அதிகாரிகள், ஊழியர்கள் வாங்கியுள்ள லஞ்சம் இது.
இதையடுத்து இந்த செக்போஸ்ட்டில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகம், உதவியாளர்கள் கிருஷ்ணன், மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதே போல அவுட் கோயிங் செக்போஸ்டில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் நடந்த சோதனையில் ரூ. 67,000 கணக்கில் வராத பணம் சிக்கியது. அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன்தாஸ், மற்றும் உதவியாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ், ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சில மணி நேரத்தில் இந்த செக்போஸ்ட்களில் ரூ. 2 லட்சம் லஞ்சம் கைப்பற்றபடுகிறது என்றால், ஒரு நாளைக்கு 3 ஷிப்ட்களில் பணியில் இருக்கும் ஊழியர்கள் மொத்தமாக வாங்கும் லஞ்சம் எவ்வளவு?!












Click it and Unblock the Notifications