பெங்களூர்- ஹூப்ளியில் 11 தீவிரவாதிகள் கைது: இந்து அமைப்பினரை கொல்ல சதித் திட்டம்

உத்தரப் பிரதேசத்தில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கர்நாடகாவிலும் பதுங்கி இருப்பதாக தெரிந்தது. உடனே, கர்நாடக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகா முழுவதும் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், பெங்களூரில் உள்ள ஜே.சி நகர் முனிரெட்டிபாளையாவில் உள்ள அடுக்குமாடியில் தீவிரவாதிகள் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை போலீசார் நள்ளிரவில் சுற்றிவளைத்தனர். அங்கு தங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தந்த தகவலை வைத்து ஹூப்ளி நகரில் கேசவராபுரத்தில் பதுங்கியிருந்த மேலும் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளியானது. தீவிரவாதிகள் கைது குறித்து கர்நாடக டிஜிபி லால்ருக்மா பஜாவு, பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி ஆகியோர் கூறுகையில்,
உத்தரப் பிரதேச போலீசார் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் பெங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் பெங்களூர் மற்றும் ஹூப்ளியில் பதுங்கியிருந்த 11 பேரை கைது செய்துள்ளனர். பெங்களூரில் மஹபூப் ரகுமான் சித்திக், அகமது மிர்ஜா, அப்துல் கஜீம், நிஜார் முகமது, முகமது யூசுப், நிஜார் அகமது ஆகியோரும், ஹூப்ளியில் இம்ரான் பகதூர், டாக்டர் ஜாகீர் உசேன் சேக், வாஹித் உசேன், ஜாபர் இக்பால், முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் ஏ தொய்பா, ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பதும், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடிய குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து கைதுப்பாக்கி, 7 வெடிகுண்டுகள், ஜெல்லட்டின் குச்சிகள், கம்ப்யூட்டர், தீவிரவாத அமைப்பு பற்றிய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் கர்நாடகத்தில் உள்ள முக்கிய எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், இந்து அமைப்பின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது. கர்நாடகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களையும் இவர்கள் தீர்த்து கட்ட திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக கடந்த 3 மாதங்களாக ரகசிய ஆலோசனை நடத்தி, திட்டங்களை வகுத்து வைத்திருந்தார்கள். தற்போது தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்தார்கள். அதற்குள் 11 பேரையும் கண்டுபிடித்து கைது செய்து விட்டதால், பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது முன்கூட்டியே தடுக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.
போலீசில் சிக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான சித்திக் பெங்களூரில் ஆங்கில பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்துள்ளார். மற்றொருவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர், சிலர் கல்லூரி மாணவர்கள். ஜாகீர் உசேன் ஷேக் டாக்டர் ஆவார்.
தந்தை சந்தேகம்:
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரின் தந்தையும், ரயில்வே ஊழியருமான அப்துல் ரவூப் மிர்ஜா நிருபர்களிடம் கூறுகையில், எனது மூத்த மகன் சோகிப் அகமது மிர்ஜா டி.ஆர்.டி.ஓவில் கடந்த 5 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரிபவர்கள் அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் கூறியதில்லை. இதைப் போல, எனது இரண்டாவது மகன் அல்-அமீன் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். இவர் மீதும் இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளையும் யாரும் கூறியதில்லை.
இந்த நிலையில் சாதாரண உடையில் வந்த போலீஸார் எனது மகன்களை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு 2 நாள் ஆகிறது. இதுவரை இவர்கள் குறித்து எந்தத் தகவலையும் போலீஸார் தர மறுக்கின்றனர். மத்திய அரசில் பணி செய்யும் என்னிடமே போலீஸார், எனது மகன்கள் கைது குறித்து எந்தத் தகவலையும் தர மறுப்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications