பெல்ஜியம் நாட்டின் 2வது துணை தூதரகம் சென்னையில் அமைக்க திட்டம்!
சென்னை: இந்தியாவில் தனது 2வது துணை தூதரகத்தை அடுத்த ஆண்டு சென்னையில் துவங்க பெல்ஜியம் அரசு திட்டமிட்டுள்ளதாக, அந்நாட்டின் துணை தூதர் கார்ல் வான் டென் போஸ்ச் தெரிவித்தார்.
பெல்ஜியம் நாட்டின் தூதரகம் டெல்லியில் அமைந்துள்ளது. மேலும் விசா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மும்பையில் துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து விசா விண்ணப்பங்கள் வருவதால், சென்னையில் 2வது துணை தூதரகத்தை துவங்க பெல்ஜியம் அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பெல்ஜியம் நாட்டு துணை தூதர் கார்ல் வான் டென் போஸ்ச் கூறியதாவது,
சென்னையில் 2வது துணை தூதரகத்தை துவங்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெல்ஜியம் நாட்டு துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் டிதியர் ரேய்ன்டர்ஸ் ஆகியோர் அதிக ஆர்வமாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் அனைத்தும், மும்பையில் உள்ள துணை தூதரகம் மூலம் கையாளப்படுகிறது. எனவே மும்பை துணை தூதரகத்தின் வேலை பளுவை குறைக்கும் வகையில், சென்னையில் 2வது துணை தூதரகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வர உள்ள பெல்ஜியம் இளவரசர் பிலிப்பி, சென்னையில் துவக்கப்படும் புதிய துணை தூதரகத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
இரு நாடுகளுக்கு இடையிலான 80 சதவீதம் வர்த்தகம் வைர வியாபாரம் மூலம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள வியாபாரிகள், பெல்ஜியத்திற்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். தற்போது பெல்ஜியத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் 120 பெல்ஜியத்தை சேர்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications