புனே அருகே போலீஸ் அதிகாரியின் ஹோட்டலில் மதுவிருந்து: 300 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள வகோலியில் உள்ள மாயா ஹோட்டலில் சட்டவிரோதமாக மதுவிருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று அதிகாலை அந்த ஹோட்டலுக்கு சென்றபோது நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், வாலிபர்கள் குடிபோதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அவ்வாறு ஆட்டம் போட்டவர்களில் 114 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். கைதானவர்களில் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் 4 பேரும் அடக்கம். பார்ட்டி நடந்த இடம் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி ரஜ்னிஷ் நிர்மல் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமானது. அவர்கள் அந்த இடத்தை லீசுக்கு விட்டுள்ளனர். அதனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பார்ட்டி நடந்த ஹோட்டலுக்கு வெளியே மாநகராட்சி உறுப்பினர் என்று எழுதப்பட்டிருந்த பிஎம்டபுள்யூ கார் நின்று கொண்டிருந்தது. விசாரணைக்குப் பிறகே விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications