திமுக எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கடத்தவில்லை: மனைவி பொய் சொல்வதாக காதல் கணவர் ரூபேஸ் புகார்
சென்னை: திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் தன்னை கடத்தவில்லை என்றும், திருமணம் செய்துகொள்ளுமாறு அன்னலட்சுமி தான் தன்னை மிரட்டினார் என்றும் அவரது காதல் கணவர் ரூபேஸ் போலீசில் புகார் தெரிவி்த்துள்ளார்.
சென்னை சாலிகிராமம் வால்மீகி தெருவைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அன்னலட்சுமி(30). கணவரை பிரிந்து வாழ்கிறவர். அவருக்கும், கம்பத்தைச் சேர்ந்த ரூபேஸ் எனவருக்கும் காதல் ஏற்பட கடந்த மாதம் கல்யாணமும் செய்து கொண்டனர். அன்னலட்சுமி திருமணம் செய்து கொண்ட ரூபேஸின் மாமா திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன்.
இந்நிலையில் ராமகிருஷ்ணனின் ஆட்கள் ரூபேஸை கம்பத்துக்கு கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரதை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அன்னலட்சுமி கடந்த 3ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் அன்னலட்சுமியின் புகாரை மறுத்து அவரது கணவர் ரூபேஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அன்னலட்சுமிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு என்னை காதலிப்பதாகக் கூறிய அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் நான் என் சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு ராமாபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்த அன்னலட்சுமி தன்னுடன் வேலை செய்த சதீஷ் ஆனந்த என்பவரை காதலித்தார். வரும் டிசம்பரில் அவரை மணப்பதாகவும் இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நான் சென்னை வந்தபோது என்னை தற்செயலாக சந்தித்த அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு எனக்கு விருந்து கொடுத்ததுடன் மது கொடுத்தார். தட்டமுடியாமல் நான் மது அருந்திவிட்டு போதையில் அங்கேயே தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் நான் கிளம்பும்போது என்னுடைய செல்போன் எண்ணை வாங்கினார்.
அதன் பிறகு அவர் அடிக்கடி என்னுடன் செல்போனில் பேசி வந்தார். திடீர் என்று ஒருநாள் போன் செய்து அவசரமாக ரூ.1 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்றார். அவர் கேட்ட தொகையை அவருக்கு கொடுத்தேன். இதற்கிடையே எனது பெற்றோர் எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். இது குறித்து அறிந்த அன்னலட்சுமி சென்னைக்கு வருமாறு என்னை அழைத்தார். கடந்த மாதம் 28ம் தேதி நண்பரின திருமணத்திற்காக சென்னை வந்தேன். அப்போது நான் அன்னலட்சுமியை சந்தித்தேன்.
அவர் தன்னை மணந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். நீ என்னை விட்டுவிட்டு வேறு யாரையாவது மணந்தால் நீ போதையில் என்னுடன் இருந்தபோது எடுத்த போட்டோவை காட்டி திருமணத்தை நிறுத்துவேன் என்று மிரட்டினார். தொடர்ந்து என்னை மிரட்டி வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்.
அதன் பிறகு அவர் அடியாட்களை வைத்து என்னை மிரட்டி அவரது வீட்டில் அடைத்துவைத்தார். கடந்த 29ம் தேதி வடபழனியில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று மிரட்டி மாலைப் போடச் சொன்னார். வேறு வழியில்லாமல் நானும் மாலையைப் போட்டேன். திருமணச் சான்றிதழில் கையெழுத்திடுமாறு மிரட்டினார். அதிலும் கையெழுத்திட்டேன்.
திருமணம் முடிந்த பிறகு மீண்டும் என்னை அவரது வீட்டில் அடைத்து வைத்தார். ஆனால் நான் அங்கிருந்து தப்பிவிட்டேன். தான் செய்த தவறில் இருந்து தப்பிக்க நான் கடத்தப்பட்டதாக அன்னலட்சுமி பொய் புகார் அளித்துள்ளார். கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனோ, வேறு யாரோ என்னை கடத்தவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications