சிவகாசி பட்டாசு ஆலை விபத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: நாம் தமிழர் கட்சி
சென்னை: சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகிலுள்ள முதலிப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
40 அறைகளில் உரிய பாதுகாப்பு வழிகள் ஏதுமின்றி, பட்டாசு தயாரிப்பதற்கான தகுதியற்ற தொழிற்கூடம் என்பதால் வெடி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உரிமம் மறுக்கப்பட்ட தொழிற்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
உரிமம் மறுக்கப்பட்ட ஒரு தொழிற்கூடத்தில் 200க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு ஆபத்து நிறைந்த ஒரு தொழில் நடத்த அனுமதித்த மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இந்த கொடூர விபத்திற்கு காரணம் என்பது புலனாகிறது.
பட்டாசு விற்கும் கடைகளுக்கு உரிமம் அளிப்பதற்கே தமிழக தீயணைப்புத் துறை பல பாதுகாப்பு நிபந்தனைகளை விதிக்கிறது. அப்படியிருக்க, அதி நவீன பட்டாசுகள், உரிமம் மறுக்கப்பட்ட ஒரு தொழிற்கூடத்தில் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது எப்படி? சிவகாசியிலும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் இப்படிப்பட்ட உரிமம் பெறாத தொழிற்கூடங்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் ஆட்சி நிர்வாகத்தில் புரையோடிப்போயுள்ள ஊழலாகும். பணத்தை தட்டினால் எல்லாம் நடக்கும் என்கிற நிலை நாட்டில் உள்ளதால்தான் இப்படிப்பட்ட கோரமாக விபத்துகள் நடக்கின்றன.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் அதிகப்படியானவர்கள் பார்வையிட வந்தவர்களே என்று செய்திகள் கூறுகின்றன. அதன் அளவிற்கு கொடூரமாக இந்த விபத்து நடந்துள்ளது. சிவகாசி பகுதியில் இயங்கி வரும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து நடப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கிறது. ஆனால் அந்த விபத்துக்களில் இருந்து நாம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே இந்த அளவிற்கு கொடூரமான ஒரு விபத்து நடக்கக் கரணியமாகிவிட்டது.
எனவே, இந்த விபத்திற்கு காரணகர்த்தாக்களான அதிகாரிகள் அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பட்டாசுத் தொழிற்கூடங்களுக்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.
மிகவும் ஆபத்தான வெடிகளை செய்ய மனிதர்களை பயன்படுத்தாமல், இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். அப்போது பிழைப்பிற்காக இப்படிப்பட்ட ஆபத்தான தொழில்களில் ஈடுபடும் ஏழை, எளிய மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும்.
அதைச் செய்யாமல் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சில லட்சங்கள் நிவாரணமாக கொடுத்துவிட்டு திருப்தியடைந்துவிடக் கூடாது. உயிர்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக நாம் மாற வேண்டும். உயிருக்கு ஆபத்தான தொழில்களை செய்வதில் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications