சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: தமிழகத்தில் அனுமதி கிடையாது - ஜெயலலிதா அறிவிப்பு

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாநில அரசுகளை அலட்சியப்படுத்துதல்
பல்பொருள் சில்லரை வணிகத்திலும், விமான போக்குவரத்துத் துறையிலும் அன்னிய நாடுகளின் நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு பிரிவினர் தெரிவித்த கருத்துகளை தவிர்த்துவிட்டு, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளின் மீது மத்திய அரசு வைத்துள்ள அலட்சியத்தையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குள்ள குழப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
மக்கள் விரோத முடிவு
மத்திய அரசின் இந்த முடிவு ஜனநாயகத்துக்கு முரணானது மட்டுமல்ல பொதுநலனுக்கும் விரோதமானது. மக்கள் விரோத கொள்கைகளை எடுத்துக் கொண்டு மத்திய அரசு தவறுக்கு மேல் தவறுகளை செய்துகொண்டு வருகிறது. தற்போது இந்த விவகாரத்தில் எடுத்துள்ள முடிவும், மத்திய அரசு செய்துள்ள பெருந்தவறுகளில் ஒன்றாக சேர்கிறது. பொதுமக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கரை இல்லை என்பதையே அவர்கள் எடுத்துள்ள இதுபோன்ற முடிவுகள் காட்டுகின்றன. எதிர்பாராத நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு டீசல் விலையை உயர்த்தி நாட்டு மக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை நேற்று அளித்த மத்திய அரசு, இப்படிப்பட்ட அறிவிப்பின் மூலம் சாதாரண மக்களுக்கு மற்றொரு அடியை கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளின் சோகத்தையும் கவலையையும் மட்டுமே அதிகரிக்கச் செய்யும்.
கடுமையாக எதிர்க்கிறேன்
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அதை நான் ஏற்கனவே எதிர்த்தேன். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ஆலோசித்து எடுக்கப்படாத ஒன்றாகும். இந்த நேரத்துக்கு தேவைப்படாத துரதிருஷ்டவசமான இந்த முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
இதுபோன்ற கொள்கைகளை வைத்துக் கொண்டு, முக்கிய விவகாரங்களில் இருந்து திசை திருப்பி மக்களை குழப்புவதையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலமாக விலைவாசி குறையப்போவதும் இல்லை, முதலீட்டு சாதக சூழ்நிலைகளை முன்னேற்றப் போவதுமில்லை. மாறாக, எம்.என்.சி. என்ற பெயரில் அழைக்கப்படும் மிகப் பெரிய வர்த்தக ஸ்தாபனங்களின் வளர்ச்சிக்குத்தான் இது உதவும்.
தமிழகத்தில் அனுமதி இல்லை
அதோடு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு, கொள்ளை விலையை நுகர்வோர் தலையில் சுமக்க வைத்துவிடும். உலகம் முழுவதும் மற்ற நாடுகளில் இந்த நிலைதான் ஏற்கனவே ஏற்பட்டு உள்ளது.மத்திய அரசின் இந்த முடிவை ஏற்கவோ அல்லது மறுக்கவோ மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருப்பதாக அறிகிறேன். இந்த விவகாரத்தால் நிர்வாக ரீதியாக பெரும் குழப்பங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன். இதன் மூலம் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையையும், பொருளாதார வளர்ச்சியில் முடக்கமும்தான் எங்களுக்கு ஏற்படும். எனவே பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நாடுகளின் 51 சதவீத முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு எனது முழுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அந்த முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நாடுகளின் முதலீட்டை தமிழகத்தில் எனது அரசு அனுமதிக்காது என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications