மத அடையாளங்களை போலீசார் அவமதித்த பிரச்சனை: கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் போது இடிந்தகரையில் கிறிஸ்தவ மத அடையாளங்களை போலீசார் அவமதித்ததாக கூறி சென்னையில் கிறிஸ்தவ அமைப்பினர் புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சில தினங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் இடிந்தகரையில் உள்ள ஆலயத்துக்குள் நுழைந்து அங்கு இருந்த லூர்துமாதா சிலையை சேதப்படுத்தியுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.
உண்ணாவிரத போராட்டம்
இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள கிருஸ்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மத அடையாளத்தை அவமானப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி, அனைத்து கிறிஸ்தவ திருச்சபை கூட்டமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போலீசார் மீது நடவடிக்கை கோரி முழக்கமிட்டனர்.
இதில். இ.சி.ஐ. திருச்சபை பேராயர் சண்முகம், முதன்மை குழு ராஜாசிங், கத்தோலிக்க திருச்சபை வேந்தர் சார்லஸ்குமார், முதன்மை குரு அருள்ராஜ், புதுவாழ்வு மக்கள் இயக்க தலைவர் நாதன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனியோ இருதயராஜ் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications