ஜெயலலிதாவுக்கு யார் யோசனையும் தேவையில்லை.. அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே! - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை. அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அனுப்பியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளார்.

திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

கருணாநிதி: ஆமாம்... தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் 14 மணி நேரமாக அதிகரித்துள்ளதால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு நாளில் 70 சத நேரத்தை மின் வெட்டே ஆக்கிரமித்துள்ளதால், அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. காலாண்டுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகள் நீர்ப் பாசனத்துக்காக விடிய விடிய காத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது. 2 மணி நேரத்தில் தொடங்கி, அதிகப்பட்சமாக 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று இருந்து வந்த மின் தடை நேரம், இப்போது 14 மணி நேரத்தை எட்டிப் பிடித்துள்ளது. குறைந்தபட்சம் மின் மிகு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கான தேவையைப் பெற ஆவன செய்தால் மட்டுமே கடும் மின்வெட்டிலிருந்து தமிழக மக்களைக் காக்க முடியும் என்கிறார்கள்.

மின் கட்டமைப்பு அதிர்வெண் இயக்க அளவை உயர்த்தியதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவிப்பதாக "தினமணி" எழுதியுள்ளது. மேலும் அதே இதழில், மின்வாரியத்தின் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், சென்னையில் நடைமுறையில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டு மீண்டும் இரண்டு மணி நேரமாகவும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமாக உள்ளது, மீண்டும் நான்கு மணி நேரமாகவும் உயர்த்தப்படலாம் என்று செய்தி வந்துள்ளது.

காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நம் முதல்வர் தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பற்றி பிரதமருடனும், அந்தத் துறையின் அமைச்சருடன் பேசி, மத்திய ஒதுக்கீட்டிலிருந்து மேலும் மின்சாரத்தைப் பெறுவதற்கான முயற்சியிலே கூட ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு யாரை எப்படி பழிவாங்கலாம், பொய் வழக்குத் தொடரலாம் என்பதைக் கவனிக்கத் தான் அக்கறை உள்ளதே தவிர மின் தடையைப் பற்றி மத்திய அரசிடம் பேச வேண்டுமென்ற நினைவு வரவில்லைபோலும்!

கேள்வி: அண்ணா வளைவினை அகற்ற வேண்டாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்ததே, என்னவாயிற்று?

கருணாநிதி: அண்ணா வளைவினை அகற்றுவதற்கான முடிவினை தன்னைக் கேட்காமலே எடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அண்ணா வளைவினை அகற்றுவது என்ற முக்கியமான முடிவினை முதல்வரின் ஆணையில்லாமல் எடுத்தது யார் என்று நான் கேட்டதற்கும் எந்தப் பதிலும் இல்லை.

அவ்வாறு யாரும் கேட்காவிட்டாலும், அந்த அண்ணா வளைவினை அகற்றுவதற்கு முன்பாகவே ஏடுகளில் எல்லாம் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று அண்ணா வளைவு அகற்றப்படவுள்ளது என்று இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே செய்தி வந்ததே, அந்தச் செய்தியைப் படித்தவுடன் முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக அதனை அகற்றக் கூடாது என்ற உத்தரவினை பிறப்பித்திருந்தால், அகற்றும் பணி தொடங்கப் பட்டிருக்காதே, அதை ஏன் முதல்வர் முன்பாகவே தெரிவிக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கும் இன்று வரை பதில் இல்லை.

அண்ணா வளைவினை அகற்றுவதற்கான பணி தொடங்கப்பட்டு, நான்கு நாட்கள் அதை அகற்றும் பணிகள் நடைபெற்று, அந்த வளைவு மிகவும் வலுவாக உள்ளது, அகற்ற முடியவில்லை என்றெல்லாம் செய்திகள் வந்தபிறகுதான் முதலமைச்சர் அதனை அகற்றத் தேவையில்லை என்று உத்தரவிட்டார் என்றால், உரிய நேரத்தில் உரிய முடிவினை எடுக்காத காரணத்தால் இன்று என்ன நிலை? அண்ணா வளைவு "திரிசங்கு" நிலையிலே உள்ளது. பாதி அகற்றப்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் விழுந்து விடக்கூடிய வகையிலே அந்த வளைவு உள்ளது. பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது. வளைவு பாதி துண்டித்த நிலையில், அது கீழே விழுந்து விடாமல் இருக்க ராட்சத கிரேன் ஒன்றை நிறுத்தியிருக்கிறார்கள். வளைவினை அகற்ற வேண்டாம் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்தது செப்டம்பர் 5ஆம் தேதி. இன்றைய தேதி 22ஆம் தேதி. இடையில் 17 நாட்களாக அந்த வளைவினை ராட்சத கிரேன் தாங்கியுள்ளது. அரை குறையாக துண்டிக்கப்பட்ட வளைவை மீண்டும் எப்படி ஒட்டவைப்பது என்ற ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

வளைவினை தாங்கி நிற்கும் ராட்சத கிரேனுக்கு ஒரு நாள் வாடகை மட்டும் சுமார் நான்கு இலட்சம் ரூபாயாம். கடந்த 22 நாட்களுக்கு, 88 லட்சம் ரூபாய் அந்த ராட்சத கிரேனுக்கு வாடகையாக அதன் உரிமையாளருக்கு அரசின் பணம் தாரை வார்க்கப்படவுள்ளது. மேலும் பொது மக்கள் அந்த வழியாகச் செல்ல முடியாமல், கடந்த 20 நாட்களுக்கு மேலாக போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ள தாம்.

கேள்வி: காவேரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் டெல்லியிலே கூடுவதற்கு முன்பாக கர்நாடக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில்?

கருணாநிதி: மெஜாரிட்டி ஜெயலலிதா அரசுக்கு யாருடைய யோசனையோ, தயவோ தேவையில்லை. அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே!

கேள்வி: உச்சநீதி மன்ற உத்தரவின்படி பிரதமர் தலைமையில் 19-9-2012 அன்று நடைபெற்ற காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் ஒரு முடிவு ஏற்படவில்லை என்பதோடு,ஆணையத்தின் தலைவரான பிரதமர் கூறியதை கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் புறக்கணித்து விட்டார்களே?

கருணாநிதி: காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் இறுதியாக கர்நாடகம் அன்றாடம் வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் 25 நாட்களுக்கு வழங்க வேண்டுமென்று கூறிய போது, அதற்கு கர்நாடகம் உடன்படவில்லை. தமிழக அரசு 9000 கன அடி தண்ணீர் வழங்கு வதை ஏற்றுக் கொண்டு, அதுபோதாது என்றும், மேலும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கலாம். அல்லது மேற்கொண்டு கிடைக்க வேண்டிய நீருக்காக உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என்று தற்போது சொல்லியிருப்பதைப்போலச் சொல்லியிருக்கலாம். அதற்கு மாறாக, பிரதமர் சொன்னதை ஏற்க மறுத்திருப்பது, காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் போலாகிவிடும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+