உளவாளி தமீம் அன்சாரியின் நண்பர்களை தேடுகிறது போலீஸ்
தஞ்சாவூர்: இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு விற்க முயன்று திருச்சியில் சிக்கிய தமீம் அன்சாரியின் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து இன்று நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு நம் நாட்டில் உள்ள ராணுவ மையங்களைப் படம் பிடித்து அனுப்ப முயன்றதாக இவரை திருச்சியில் கியூ பிரிவு போலீஸார் செப். 17-ந் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை போலீஸார் நேற்று ஒரு நாள் காவலில் எடுத்தனர்.
அன்சாரி வீட்டில் விசாரணை
இதைத் தொடர்ந்து, தமீம் அன்சாரி தஞ்சாவூருக்கு இன்று அழைத்து வரப்பட்டார். மாதாக்கோட்டை சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அன்சாரியின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் அவரை போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
நீதிபதியிடம் ஆஜர்
பின்னர் மாலையில் திருச்சியில் நீதிபதி வீட்டில் போலீசார் தமீம் அன்சாரியை ஆஜர்படுத்தினர். தமீம் அன்சாரியை மேலும் சில நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தமீம் அன்சாரியுடன் நெருக்கமாக இருந்த விசாகப்பட்டினம், தஞ்சை, சென்னையில் உள்ள நண்பர்களை பிடிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தீவிரவாதிகளை பிடிக்கவும் க்யூ பிரிவு போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை உளவாளிகள்
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பெயரும் தமீம் அன்சாரி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றும் அமிர் சுபைர் சித்திக் மற்றும் இலங்கையைச் சேர்ந்த காஜி மற்றும் ஷாஜி ஆகியோரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications