கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
சிந்த்வாரா: மத்திய பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்த ராஜபக்சேவுக்கு எதிராக சிந்த்வாராவில் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநில போலீசார் வைகோவிற்கு மாலை போட்டு மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.
சாஞ்சியில் உள்ள புத்தர் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்த ராஜபக்சேவிற்கு கறுப்புக் காட்டுவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு வைகோ மத்தியபிரதேசம் சென்றார். மதிமுக வினர் அனைவரையும் மகாராஷ்டிரா- மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் போலீசார் தடுத்த நிறுத்தனர். 40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார். அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமணமண்டபத்தில் அனைவரையும் தங்கவைத்தனர். அங்கு அவர்களுக்கு டீ, பிஸ்கெட் வழங்கப்பட்டது. இதனையடுத்து வைகோவையும் தொண்டர்களை சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தன்வீர், மந்திலா மாவட்டத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் இளையராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினார். மதிமுக தொண்டர்களால் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறி பாராட்டு தெரிவித்தனர். இதன்பின்னர் சில மணிநேரம் கழித்து அங்கு வந்த போலீசார் வைகோவை விடுதலை செய்த போலீசார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.
சென்னையில் வரவேற்பு
இதனிடையே ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோவுக்கு அக்கட்சியினர் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்துள்ளனர். இது குறித்து ம.தி.மு.க அமைப்பு செயலாளர் சீமா பஷீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது:-
மத்தியபிரதேச - மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலே கடுமையான வெயிலையும் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாது, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, சாலை ஓரத்திலே உண்டு, உறங்கி 21-ந்தேதி காலை 11 மணி அளவில் தடையை மீறி கைதாகி, மாலையில் விடுதலை செய்யப்பட்டு, தற்போது சென்னையை நோக்கி பயணம் மேற் கொண்டுள்ளனர்.
தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி இப்படி ஒரு மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது என்ற பெருமையோடு இன் முகத்தோடு தமிழகம் திரும்பி வரும் வைகோ ஞாயிறு காலை 7 மணி அளவில் சென்னை அண்ணா சதுக்கத்திற்கு வந்து, அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். போராட்டக் களத்திற்கு சென்று வெற்றியோடு திரும்பும் தலைவர் வைகோவையும், அவரது சகாக்களையும் வரவேற்க நாளை காலை 7 மணி அளவில் அண்ணா சதுக்கத்தை நோக்கி கழகக் கொடி ஏந்தி அணி அணியாகத் திரண்டு வர அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications