பெங்களூர் இஸ்ரோ தலைமையகத்துக்குள் நுழைந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராம்

பெங்களூரில் உள்ள பழைய விமான நிலைய சாலையில் உள்ளது இஸ்ரோ தலைமையகம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பெண் ஒருவர் தன்னை விஞ்ஞானி என்று கூறிக் கொண்டு இஸ்ரோ தலைமையகத்திற்குள் இரண்டு முறை சென்று வந்துள்ளார்.
அவ்வளவு பாதுகாப்பு இருந்தும், போலி ஐடி கார்ட்டைக் காட்டி பெண் ஒருவர் அதுவும் இரண்டு முறை இஸ்ரோ தலைமையகத்திற்குள் சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று காலை மீண்டும் இஸ்ரோ தலைமையகத்திற்குள் நுழைய முயன்றபோது நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டார். அப்போது அவர் வைத்திருந்தது போலி ஐடி கார்ட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த பெண் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜூலா என். சாம் (44) என்றும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஜூலா கடந்த 19ம் தேதி கொல்லத்தில் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு அன்றிரவே பெங்களூர் திரும்பியுள்ளார்.
கொல்லத்தில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் கிடைத்த இஸ்ரோ ஐடி கார்டில் தனது போட்டோவை ஒட்டி அதை காண்பித்து இஸ்ரோவின் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். பெங்களூரில் உள்ள ஜூலாவின் கணவர் தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ளார் என்றனர்.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications