ரேஷன் சர்க்கரை விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசு ரேஷன் சர்க்கரை விலையை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: ரேஷன் சர்க்கரை விலையை மத்திய அரசு உயர்த்தப் போவதாக ஒரு செய்தி வருகிறதே?

பதில்: அது உண்மையாக இருக்கக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம். ரேஷன் கடைகளில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு வழங்கப்படும் ஒரு கிலோ சர்க்கரையின் தற்போதைய விலை ரூ.13.50. இந்தச் சர்க்கரைக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை முற்றிலும் ரத்து செய்வது என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அதைப் பற்றிய முடிவினை அடுத்து வரும் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால், ரேஷன் சர்க்கரையின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.25.17 என்று உயரக்கூடும் என்று சொல்கிறார்கள். இந்த முடிவு எடுக்கப்பட்டால் ரேஷன் சர்க்கரை விலை மாத்திரமல்ல; வெளிச்சந்தையிலே விற்கப்படுகின்ற சர்க்கரையின் விலையும் தற்போது ஒரு கிலோ 40 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுவது, 55 ரூபாயைத் தாண்டி விற்கப்படக்கூடும்.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு என்றெல்லாம் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் முடிவுகளைத் தொடர்ந்து மத்திய அரசு இப்படியொரு முடிவினை எடுக்க நினைத்திருந்தாலும், அதனைத் தவிர்க்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

அதுபோலவே, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியையும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும். வருவாயைத் திரட்டுகிறோம் என்ற பெயரால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மிகவும் பாதிக்கின்ற செயலாகவே இருக்கும்.

கேள்வி: "டெசோ'' மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா. மன்றத்திடம் நேரில் சென்று ஒப்படைக்க நீங்கள் முன்வந்துள்ளதைப் போலவே, இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள், ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருக்கிறார்களே?

பதில்: இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பி.க்கள்; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையோடு செயல்படாத இலங்கை அரசாங்கம், தமிழர்களை அழிக்கும் கொள்கையுடன் செயல்பட்டு வருகின்றது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் "டெசோ'' மாநாட்டில் விரிவாகத் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதோடு, ஐ.நா. மன்றத்திலும் விரைவில் கொடுக்க விருக்கிறோம்.

கேள்வி: செப்டம்பர் 16ம் தேதி திருச்சியில் 782 முதுகலை ஆசிரியர்களுக்கான நியமன ஆணையை வழங்கிய விழாவில் பேசிய அமைச்சர் முதல்வர் ஆணைப்படி, ஒளிவு மறைவு இல்லாமல் இந்தக் கலந்தாய்வு ஆன் லைன் வயிலாக நடந்தது'' என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: இந்த 782 பேர் நியமனம்தான் ஒளிவு மறைவு இல்லாமல் நடைபெற்றது என்றால், மற்ற நியமனங்கள் எல்லாம் முறையாக நடக்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறாரா? 18-4-2012 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த போது அமைச்சர் என்.ஆர்.சிவபதி 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார்.

தற்போது திருச்சியில் 782 முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் அறிவிப்பிலே மட்டும் 59 ஆயிரம் என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். இதிலே எதுதான் உண்மையோ? எவர் அறிவார்? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+