எல்லாவற்றிலுமா துரோகம்- இரட்டை வேடம்- ஏடாகூடம்?: கருணாநிதி மீது ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: காவேரி நதிநீர்ப்பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரியில் முதல் துரோகம்

காவேரி நதிநீர்ப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்த்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஹேமாவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை என்று 6.3.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசி இருக்கிறார் கருணாநிதி. இது கருணாநிதியின் முதல் துரோகம்.

இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக்குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது.

2-வது, 3வது துரோகங்கள்

கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தார் கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம். காவேரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, 4.8.1971 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை, தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, இரு அவைகளுக்கும் தெரிவிக்காமலேயே கமுக்கமாக 28.8.1972 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டார் கருணாநிதி! இது கருணாநிதி யின் மூன்றாவது துரோகம்.

இவ்வாறு தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள கருணாநிதி, மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்- அமைச்சராக இருந்த போது, கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவேரியிலிருந்து தண்ணீர் விட மாட்டோம் என்று சொல்லியிருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால் நான் சொல்கிற பதில்களினால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படு வதற்கு நான் இடம் தர விரும்ப வில்லை என்று தன்னலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், பதில் அளித்தவர் கருணாநிதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும், காவேரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை.

நதிநீர் ஆணையம்

இப்படிப்பட்ட கருணாநிதி, காவேரி நதிநீர் ஆணையத் தின் தலைவரான பிரதமர் மன்மோகன்சிங் இறுதியாக கர்நாடகம் அன்றாடம் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் 25 நாட் களுக்கு வழங்க வேண்டும் என்று கூறிய போது, அதற்கு கர்நாடகம் உடன்படவில்லை.

தமிழக அரசு 9,000 கன அடி தண்ணீர் வழங்குவதை ஏற்றுக் கொண்டு, அது போதாது என்றும், மேலும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கலாம் என்று காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தனக்கு மிகுந்த அக்கறை உள்ளது போலவும்; இதனை தமிழக அரசு சரியாக அணுகவில்லை என்பது போலவும்; பிரதமரின் தீர்ப்பு ஏற்புடையதல்ல என்று தெரிவித்து நாம் உச்ச நீதிமன்றம் செல்ல முனைவதால், கர்நாடகம் தண்ணீர் விடுவிக்கவில்லை என்பது போலவும் மக்களை ஏமாற்றும் விதமாக, தனது கேள்விபதில் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்திற்கு கர்நாடகம் உரிய தண்ணீரை திறந்து விடாததால், இங்கு பயிர் பாதிப்பு ஏற்படுகிறது என்ற உடனேயே, தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவேரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், 12.9.2012 முதல் 20.9.2012 வரை வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி பார்த்தாலே, கர்நாடகம் தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 2 டி.எம்.சி. அடி வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பான வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீருக்கும் குறைவாக பாரதப் பிரதமரின் தீர்ப்பு அமைந்துள்ளதால், அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் தமிழ கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கர்நாடகத்தின் சார்பில் ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குறைந்த பட்சம் இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி, தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தாக்கல் செய்ததால் தான் 12.9.2012 முதல் 20.9.2012 வரை வினாடிக்கு 10,000 கன அடி என்ற அளவில் தண்ணீரை பெற முடிந்தது. உச்சநீதிமன்றம் மூலம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்திட ஆவன செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடங்குளத்துக்கு கருணாநிதி ஆதரவு

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், அதன் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் அச்சம் எழுப்பிய போது, அவர்களின் அச்சத்தைக் களையும் வகையில், மத்திய அரசின் சார்பில் வல்லுநர் குழு அமைக்கவும், அதைத் தொடர்ந்து மாநில அரசின் சார்பில் வல்லுநர் குழு அமைக்கவும் நான் நடவடிக்கை எடுத்தேன்.

அந்தக் குழுக்களும் அப்பகு திக்குச் சென்று, அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித்தன. அந்தத் தருணத்தில், இனியும் தாமதிக்காமல் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தினை திறப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும், எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதி தப்பிக்க நினைக்கும் ஜெயலலிதாவின் மாய் மாலத்தை தமிழக மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், கையிலே வெண் ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற காரியம் என்றும் அறிக்கைகளை வெளியிட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. சுருக்க மாகச் சொல்ல வேண்டும் என்றால், அப்பகுதி மக்களின் அச்சத்தை, உணர்வுகளை மதிக்காமல், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்பது தான் கருணாநிதியின் வாதமாக இருந்தது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் அமைக் கப்பட்ட வல்லுநர் குழுக்களின் அறிக்கைகளை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பதால், அணுமின் நிலையப் பணிகளை தொடர் வதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு சில வாரங்களில் தனது உற்பத்தியை தொடங்க இருக்கும் நிலையில், மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளை எல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவன செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள் தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப் போல இந்த அரசு நினைக்கக் கூடாது என்று நீட்டி முழக்கி இருந்தார் கருணாநிதி.

இரட்டை வேடம்

இப்படி ஆறே மாதத்தில் அந்தர் பல்டி அடித்துள்ள கருணா நிதி, கூடங்குளம் போராட்டக் காரர்களை எல்லாம் தொடக்கத்தில் ஊக்கப் படுத்தி, ஆதரவளித்த தமிழக முதலமைச்சர் ஜெய லலிதா தற்போதெல்லாம் அதைப்பற்றி வாயையே திறப்பதில்லையேப என்று தற்போது வினவியிருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு இதை விட ஒரு சிறந்த சான்று தேவையில்லை.

கூடங்குளம் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நலத் திட்ட உதவிகளைப் பொறுத்த வரையில், அதற்காக 500 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அங்கு ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகியவுடன், அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நிர்வாகத் திறமையில்லாததால் இருள்

தமிழ்நாட்டில் மின்வெட்டுப் பிரச்சனை நீங்கி எனக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற பொறாமையில் முன்னுக்குப் பின் முரணான அறிக்கையினை கருணாநிதி வெளியிட்டு இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. முந்தைய மைனரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நிர்வாகத் திறமையின்மையாலும், குளறுபடிகளாலும் தமிழகத் திற்கு ஏற்பட்ட இருள் எனது ஆட்சிக் காலத்தில் நிச்சயம் விலகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின் பற்றாக்குறை ஏன்?

மேலும், மின்மிகு மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற்றால் மின்வெட்டிலிருந்து தமிழக மக்களை காக்க முடியும் என்றும், மத்திய ஒதுக்கீட்டிலிருந்து மேலும் மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறியிருக்கிறார் கருணாநிதி.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்கு வதற்கான நடவடிக்கையை எடுக்கத் தவறியதோடு மட்டு மல்லாமல், பிற மாநிலங் களிலிருந்து நீண்ட கால அடிப் படையில் குறைந்த விலையில் மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தங்களை போடவும் தவறிவிட்டது.

மாறாக, குறுகிய கால ஒப்பந்தம் மற்றும் மின் பரிமாற்றத்தின் அடிப்படையில், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பெற்றது. இந்தச் சூழ்நிலையில், தென் மின் கடத்தும் தொடர் அமைப்பில் உள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் பெறும் இதர தென் மாநிலங்களுக்கு மின் தொடரில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் நீண்டகால அடிப்படையில் மின்சாரம் வாங்குவதற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஒப்பந்தம் போட்டிருக்குமேயானால், இன்றும் கூட யூனிட் ஒன்றிற்கு மூன்று ரூபாய்க்கும் குறைவாகவே மின்சாரம் பெற்றிருக்க இயலும் என்பதோடு மட்டுமல்லாமல், தென் மின் தொடர் அமைப்பில் தமிழ்நாட்டிற்கும் ஒதுக்கீடு கிடைத்திருக்கும். இதை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்யத் தவறிய தன் காரணமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டும், 235 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் பெறப்பட்டது.

இப்பொழுதும் கூட, 1,600 மொகாவாட் அளவிற்கு பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் நடைமுறையில் உள்ள போதும், 81 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்தை மட்டுமே பெற முடிகிறது. இது மட்டுமல்லாமல், வட மாநில மின் பரிமாற்றங்களில் 3 ரூபாய்க்கும் குறைவாக இன்றும் ஒரு யூனிட் மின்சாரம் விற்கப்படும் போது, தென் மாநில மின் பரிமாற்றங்களில் 12 ரூபாய்க்கும் அதிகமாக மின்சாரம் விற்கப்படுகிறது. மின் தொடர் நெருக்கடி காரணமாக, அதிக விலை கொடுத்தும் மின்சாரம் வாங்குவதற்கான வழியில்லாத நிலையை ஏற்படுத்தியதே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு தான் கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவன்றி, அகில இந்திய அளவில், குறிப்பாக தென் மாநிலங்களில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, மின் மிகை மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறக் கூடிய சூழ்நிலை என்பது அறவே இல்லை என்பது தான் உண்மை நிலை.

எல்லாவற்றிலும் இரட்டை நிலைப்பாடு

டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றிலும் கருணாநிதியின் இரட்டை நிலை தொடர்கிறது. மத்திய அரசின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தான் டீசல் விலைக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்தக் குழுவில் தி.மு.க.வின் சார்பில், கருணாநிதியின் புதல்வர் மு.க. அழகிரியும் உறுப்பினர். இந்தக் கூட்டத்தில் அழகிரி கலந்து கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாராப அல்லது டீசல் விலை உயர்விற்கு ஒப்புதல் அளித்தாராப அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லையா என்பதை நாட்டு மக்களுக்கு கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும்.

அன்னிய முதலீட்டுக்கு கருணாநிதி ஆதரவு

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை மத்திய அரசு அனுமதித்துள்ளதை பொறுத்த வரையில், 21.9.2012 அன்று மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உறுதியாக இருக்கிறீர்களாப என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, எங்களைப் பொருத்தவரையில், நாங்கள் மற்ற கட்சிகள் எடுக்கும் முடிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்து, எந்த கூட்டணியிலே நாங்கள் இடம் பெற்றாலும், அந்தக் கூட்டணியிலிருந்து அவசரப்பட்டோ, ஆத்திரப் பட்டோ உடனடியாக விலகிக் கொள்வதை விரும்புவதில்லை. கூட்டணி தர்மத்தை நாங்கள் எப்போதும் காப்பாற்றுவோம். அப்படியே காப்பாற்றி வருகிறோம்.

கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை என்று பதில் அளித்து இருக்கிறார். அதாவது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை மத்திய அரசு அனுமதித்து இருப்பதை தான் ஆதரிப்பதாக தெளிவுபடுத்தி இருக்கிறார் கருணாநிதி.

திமுக பந்த் டிராமா

அதே சமயத்தில், டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றிற்கு எதிரான நாடு தழுவிய பந்த்' போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார் கருணாநிதி. இருப்பினும், பந்த் தினத்தன்று தி.மு.க. அமைதி காத்தது என்பதுதான் உண்மை.

ஆனால், கேள்வியும் நானே, பதிலும் நானே அறிக்கையில், வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை, 2,700 கடைகள் அடைப்பு, தி.நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன, நகை மற்றும் ஜவுளி விற்பனைக் கடைகள் அதிகம் நிறைந்த உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் சாலைகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன, நடைபாதைக் கடைகளும் இயங்காததால் வெறிச்சோடி காணப்பட்டது என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளதாக குறிப் பிட்டு, தி.மு.க. பந்த்தில் கலந்து கொண்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார் கருணாநிதி. இது கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

ஏட்டிக்கு போட்டி- ஏடாகம்

தமிழ்நாட்டின் நன்மைக்காக, தமிழர்களின் உரிமைகளை காக்கும் பொருட்டு, நான் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு எதிராக, ஏடாகூடம், ஏட்டிக்கு போட்டி என்ற வகையில் விதண்டாவாதம் செய்து, முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டி ருக்கிறார் கருணாநிதி.

தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இது போன்ற முரண் பாடான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+