சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு விபத்து: 3 பேர் உடல் கருகி பலி
விருதுநகர்: சிவகாசி அருகே இன்று காலை ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் செயல்பட்டு வந்த ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 39 பேர் உடல் கருகி பலியானார்கள். அதன் பிறகு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை அடுத்த விஜயகரிசல்குளத்தில் செல்லப்பாண்டியன் என்பவரின் வீட்டில் முறையான அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். மேலும் அதே வீட்டில் உள்ள ஒரு அறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்துள்ளது.
இன்று காலை அந்த வீட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கையில் பட்டாசுகள் திடீர் என்று வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாக்கியராஜ், குமார் உள்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
செல்லப்பாண்டியன் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சண்முகையாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications