சென்னை அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் பதிவு அமல்-3 நாள் தாமதமாக வந்தால் 'ஆப்சென்ட்'!
சென்னை : சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இம்மாதம் முதல் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு அமல் படுத்தப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்பது புகார். சென்னையில் அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் பணிக்கு தாமதமாக வந்து அமைச்சர் ஆய்வின் போது பிடிபட்டார். இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்கள் பணிக்கு வருவதை முறைப்படுத்த பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் உத்தரவிட்டார். இதற்கு மருத்துவர்களிடையேயும், ஊழியர்களிடையேயும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அக்டோபர் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஸ்டான்லி, கீழ்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு விரல்ரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அரசு பொது மருத்துவமனையில் 4500 பேர் பணியாற்றுகிறார்கள். 2000 டாக்டர்கள், 750 நர்சுகள், லேப் டெக்னீஷியன், மற்றும் மருந்து தருபவர்கள் 300 பேர், மற்ற ஊழியர்கள் 1200 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களின் பெயர், விவரங்கள், பணி செய்யும் துறை, பிறந்த தேதி மற்றும் அவர்களது வலது, இடது ஆள்காட்டி விரல்களும் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு துறையின் நுழைவு வாசலில் இந்த கருவி பொருத்தப்படுகிறது. அரசு பொது மருத்துவமனையில் 13 இடங்களில் அமைக்கப்படுகிறது. மருத்துவர்கள், நர்சுகள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் என்பதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அரைநாள் ஆப்சென்ட்
ஒவ்வொருவரும் பணிக்கு வர வேண்டிய நேரத்தில் இருந்து 15 நிமிடங்கள் கருணை நேரடியாக வழங்கப்படுகிறது. அதற்குள்ளாக ஆஸ்பத்திரிக்குள் இருக்க வேண்டும். அதன் பிறகும் தாமதமாக வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவர் 3 நாட்கள் தாமதமாக பணிக்கு வந்தால் அரைநாள் ஆப்சென்ட் (தற்காலிக விடுப்புகள்) போடப்படும் என்று மருத்துவமனை டீன் வே.கனகசபை தெரிவித்தார்.
இயந்திரங்கள் பொருத்தும் பணி ஒரிரு நாட்களில் முடிவடைந்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் பயோமெட்ரிக் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பயோமெட்ரிக் திட்டம் சரி தரமான சிகிச்சை கிடைக்குமா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications