''அப்பா அப்பா... குடிக்கிறது தப்பப்பா... நீ திருந்துவது எப்பப்பா...''
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் சென்னையில் காந்தி சிலை முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் குடியால் கணவனை இழந்த விதவை பெண்களும், குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களும் பங்கேற்று ஒப்பாரி வைத்தனர்.
குடி குடியை கெடுக்கும் என்று பாட்டில்களில் மட்டுமே போட்டு வைத்திருக்கின்றனர். அந்த குடியால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
மெமோரியல் ஹால் முன்பாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை சுற்றி தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த விதவை பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
போராட்டத்துக்கு தலைமை தாங்கிய டாக்டர் ராமதாஸ், ஒவ்வொரு பெண்களையும் அழைத்து குடியால் சீரழிந்த அவர்களது துயரத்தை பொது மக்கள் அறியும்படி எடுத்து சொல்லும் படி கூறினார்.
சில விதவை பெண்கள் துக்கம் தாளாமல் விம்பி அழுதபடியே தங்கள் குடும்பம் படும் துயரங்களை எடுத்துக் கூறினார்கள். குடியால் தங்களின் குடும்பம் எந்த அளவிற்கு பாழானது என்று பாடல்கள் பாடி அவர்கள் ஒப்பாரி வைத்தது கேட்போரின் கண்களை குளமாக்கியது.
விதவை பெண் ஒருவர் தனது கணவரைப் பற்றியும் அவர் பாசமாக குடும்பத்தை நடத்தி வந்ததையும், குடியால் சீரழிந்து போனதையும் வேதனையுடன் சொல்லி ஒப்பாரி பாடினார். ஒவ்வொரு விதவை பெண்ணும் தான் அனுபவித்த வேதனைகளையும், கணவர் குடித்ததால் இன்று சாப்பாட்டுக்கே வழி இன்றி திண்டாடுவதையும் சொல்லி அழுதனர்.
10, 15 பெண்கள் இவ்வாறு ஒப்பாரி வைத்ததை பார்த்ததும் மற்ற விதவை பெண்களும் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் போராட்டம் நடத்த அந்த பகுதி முழுவதும் சோக மயமானது. போராட்டத்தில் பங்கேற்ற சில குழந்தைகள், அப்பா அப்பா... குடிக்கிறது தப்பப்பா... நீ திருந்துவது எப்பப்பா..." என்று குடும்ப அவலத்தை பாடலாக பாடி கண்ணீர் வரவழைத்தனர்.
மதுக்கடைகளுக்கு பூட்டு
போராட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசும் போது, தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் குடிக்கு தங்கள் கணவர்களை இழந்து விதவைகளாகி உள்ளனர். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு போடுங்கள். இனியும் மதுக்கடைகளை மூடாவிட்டால் டிசம்பர் 17-ந் தேதி அனைத்து மதுக்கடைகளுக்கும் பூட்டு போடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications