பெரியாறு அணை ஷட்டர் பகுதியில் மண் அகற்றும் பணி துவக்கம்: கேரளா அமைதி
கூடலூர்: பெரியார் அணையின் ஷட்டர் பகுதியில் உள்ள மண் அகற்றும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட கேரள அதிகாரிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பெரியார் அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு சம்மதித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை உறுதித் தன்மை குறித்து அச்சம் தெரிவித்த கேரள அரசு, இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான உயர்நிலை குழுவினர் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்றது.
இதற்காக 8 வல்லுனர்கள் கொண்ட குழு நடத்திய 13 ஆய்வு அறிக்கையுடன், உயர்நிலை குழு அளித்த இறுதி அறிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்ததது.
ஆனால் தமிழக அரசு சார்பாக பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முயன்ற போது, கேரள அரசு பொறியாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் போது மத்திய நீர்வள ஆணைய பொறியாளர், கேரளா நீர்வள பொறியாளர்களின் மேற்பார்வையில் பணிகள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு தமிழகம் சார்பில் கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம், மத்திய நீர்வள ஆணையம் சார்பில் அணை பாதுகாப்புக்குழு இயக்குனர் தனேஜாவும், கேரளா அரசு சார்பில் அந்த மாநில நீர்வள கண்காணிப்பு பொறியாளர் ஜார்ஜ் ஜோசப்பும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள், நீதிமன்றம் அமைத்த குழுவினர் முன்னிலையில் நடைபெறுகிறது. இதன் முதல் கட்டமாக பேபி அணையின் முக்கிய பராமரிப்பு பணிகள், மதகு பகுதியில் தேங்கிய மண்ணை வெளியேற்றுதல், பெரியாறு அணையின் ஷட்டர் பகுதியில் குவிந்துள்ள மண் அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளுக்கு கேரள அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications