ஹாங்காங்கில் படகுகள் மோதி விபத்து: படகு மூழ்கி 36 பேர் பலி
ஹாங்காங்: சீனாவின் தேசிய நாள் மற்றும் இலையுதிர் கால திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற 2 படகுகள் மோதி கொண்டன. இதில் ஒரு படகு நீரில் மூழ்கியதில் 36 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய நாள் மற்றும் இலையுதிர் கால திருவிழா நேற்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதற்காக வானவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை காண 100க்கும் மேற்பட்டோர் படகுகளில் ஏறி விக்டோரியா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
நேற்றிரவு லம்மா தீவின் அருகே சென்ற போது இரு படகுகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகளுடன் சென்ற ஒரு படகு நீரில் மூழ்கியது. இதில் நீச்சல் தெரியாத பலரும் நீரில் மூழ்கினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், நீரில் மூழ்கியவர்களை மீட்டனர். இதில் 36 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் குளிர்ந்த நீரில் குளிர் தாங்க முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஹாங்காங்கை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது,
விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ள மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கடல்வழி மற்றும் வான்வழி மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
விபத்தில் சிக்கிய படகு பாதியளவு மட்டுமே மூழ்கியுள்ளது. இதனால் பெரும்பாலானோர் நீரில் மூழ்காமல் தப்பினர். மேலும் 200 பயணிகள் கொள்ளளவு கொண்ட படகில் 121 பேர் மட்டுமே அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதனால் படகில் அதிக பாரம் காரணமாக மூழ்கியது என்று கூற முடியாது. மேலும் விபத்தை ஏற்படுத்திய மற்றொரு படகு, நிற்காமல் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications