காவிரி விவகாரம்: மைசூர் கிருஷ்ணராஜா சாகர் அணையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
மாண்டியா: தமிழகத்திற்காக காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து, இன்று மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையருகே ஆயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அத்துமீறிய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கர்நாடகாவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்தும், தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ள தண்ணீரை உடனடியாக நிறுத்த கோரியும், கர்நாடகாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று மதியம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கிருஷ்ணராஜா சாகர் அணையின் அருகே ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த செலுவராயாசாமி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பட்டுராஜூ, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்பினர் டயர்களை எரித்தனர்.
அப்போது அணையின் தடை செய்யப்பட்ட இடத்திற்கு செல்ல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இருத்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கபினி அணை அருகே காங்கிரஸ் எம்.பி. விஸ்வநாதன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மைசூர்-மாண்டியா இடையிலான சாலை மற்றும் ரயில் பாதைகளில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாண்டியாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ரிசர்வ் போலீசார், அதிரடி படை மற்றும் எல்லையோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று காவிரி விவகாரம் குறித்து முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
இதில் தங்களது சாதகமான முடிவு எடுக்கப்படாவிட்டால் கன்னட ஹிதரக்ஷன சமிதி என்ற கன்னட விவசாயிகள் அமைப்பின் தலைவர் மாதே கெளடா சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும் வரும் 6ம் தேதி பந்த் நடத்தவும் விவசாயிகள், கன்னட அமைப்புகள் தயாராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications