எக்ஸ்ரே எடுக்க ரூ.150 லஞ்சம்: அரசு மருத்துவமனை ஊழியரை 'டிஸ்மிஸ்' செய்த கலெக்டர்
வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க ரூ.150 லஞ்சம் கேட்ட ஒப்பந்த பணியாளரை, பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
வேலூர் கலெக்டர் சங்கர் நேற்று பாகாயம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து, மாணவியரிடம் கேட்டறிந்தார். அப்போது விடுதியில் தரமான மற்றும் சுவையான உணவு வழங்குவதில்லை என்று சில மாணவியர் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியருக்கு சுவையான உணவுகளை வழங்குமாறு கலெக்டர், விடுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பிறகு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் சங்கர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று டாக்டர்கள், நர்சுகள் வருகை பதிவேடுகளை பரிசோதித்தார். மேலும் மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரிக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகளை கலெக்டர் பார்வையிட்டார். ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து நோயாளிகளிடம், கலெக்டர் கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் பொன்னம்மா என்பவரது உறவினர், மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க ஊழியர்கள் ரூ.150 பணம் கேட்பதாக தெரிவித்தார். மேலும் பணத்தை தந்தால் மட்டுமே எக்ஸ்ரே எடுக்க முடியும் என்று கூறுவதாக, கலெக்டரிடம் தெரிவித்தார்.
இது குறித்து உடனடியாக விசாரிக்குமாறு மருத்துவமனை முதல்வருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில், ஜனார்த்தனன் என்பவர் எக்ஸ்ரே எடுக்க ரூ.150 லஞ்சம் கேட்டது தெரியவந்தது.
கலெக்டரின் உத்தரவை ஏற்று ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வந்த ஜனார்த்தனனை உடனடியாக பணி நீக்கம் செய்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிசங்கர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications