காவிரி: கர்நாடக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்-முன்னாள் முதல்வர் சதானந்த கெளடா

தமிழகத்துக்கு காவிரியில் தினமும் 9,000 கன அடி நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
இதை விசாரித்த நீதிபதிகள், பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.
இந் நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தக்கோரி விவசாயிகள், கன்னட அமைப்பினர் கர்நாடகத்தில் சாலை மறியல், ரயில் மறியல், அணை முற்றுகை, ஊர்வலம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்ட அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோரும் சென்றனர். அங்கு, கர்நாடக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் பாலி நாரிமன் மற்றும் சட்ட நிபுணர்களுடன் இன்று அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று காலை ஹூப்ளியில் நிருபர்களிடம் பேசுகையில், மத்தியக் குழுவை அனுப்பி ஆய்வு செய்த பின்னர் காவிரி பிரச்சனையில் பிரதமர் முடிவு எடுத்து இருக்க வேண்டும், ஆனால் அவசரப்பட்டு தமிழகத்துக்கு திறந்து விடுமாறு அவர் உத்தரவிட்டு விட்டார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, கர்நாடகத்தை சேர்ந்த எம்.பிக்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவேன். இதற்காக, டெல்லி செல்கிறேன் என்றார்.
இந் நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்துக்கு பாதகமான தீர்ப்பு வந்தால், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கர்நாடக முன்னாள் பாஜக முதல்வரான சதானந்த கெளடா கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications