அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை எதிர்த்து இம்ரான்கான் நடத்திய பேரணி ராணுவத்தால் தடுத்து நிறுத்தம்
கோட்கய்: பாகிஸ்தானின் எல்லையோர மாகாணமான வஜ்ரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலமான தொடர் தாக்குதலைக் கண்டித்து இம்ரான்கான் நடத்திய பேரணியை ராணுவம் தடுத்து நிறுத்தியது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், எல்லையோரத்தில் இருக்கும் பாகிஸ்தான் மாகாணமான வஜ்ரிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாலிபன்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த ஆளில்லா விமானம் மூலமான தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பலியாவது தொடர் கதையாகிவிட்டது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், நேட்டோ படையினருக்கு சரக்குகளை கொண்டு செல்லும் பாதையை திடீரென மூடியது. பின்னர் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி திறக்க வைத்தது.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல் விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறார். அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து எல்லையோர மாகாணமான வஜ்ரிஸ்தான் நோக்கி தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றார். அவரது பேரணி வஜ்ரிஸ்தான் மாகாண எல்லையான கோட்கய் கிராமத்தை நேற்று அடைந்த போது அவரை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இம்ரான்கான் தடுத்து நிறுத்தப்பட்டதாக ராணுவத்தினர் கூறினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய இம்ரான்கான் தமது ஆதரவாளர்களுடன் அருகில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்துக்கு சென்று பொதுக்கூட்டம் நடத்தினார்.












Click it and Unblock the Notifications