மறுபடியும் 'கலர்' மாறிய கருணாநிதி... மீண்டும் வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டு!

மறுபடியும் 'கலர்' மாறிய கருணாநிதி... மீண்டும் வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தனது சட்டை நிறத்தை மாற்றியுள்ளார். இனிமேல் எப்போதும் கருப்புச் சட்டைதான் போடுவேன் என்று அறிவித்திருந்த அவர் தற்போது மீண்டும் வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டுக்குப் போய் விட்டார்.
திருமண விழா உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது கருப்புச் சட்டையுடன் போனால் அபசகுணமாக இருக்கும் என்று குடும்பத்தார் உள்ளிட்டோர் எடுத்துக் கூறி வலியுறுத்தியதால்தான் கருணாநிதி சட்டையை மாற்றி விட்டார் என்று கூறப்படுகிறது.

கருப்பு சட்டை...
அதிமுக ஆட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புச் சட்டைப் போராட்டத்தை அறிவித்தது திமுக. அதன்படி 3 நாட்கள் இதை நடத்தினர். ஆனால் முதல் நாளே கருணாநிதி கருப்புச் சட்டைக்கு மாறி விட்டார். இனிமேல் இப்படித்தான் இருப்பேன் என்றும் அறிவித்தார். கருணாநிதி கருப்புச் சட்டைக்கு மாறியதும் கூட பரபரப்பாக பேசப்பட்டது.

வெள்ளைச் சட்டை...
இந்த நிலையில் தற்போது மறுபடியும் சட்டையை மாற்றி விட்டார் கருணாநிதி. கடந்த 2 நாட்களாக அவர் அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டுடன்தான் வந்தார். சட்டையை ஏன் மாற்றினார் என்பது குறித்து விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.
கருப்புச் சட்டைக்கு கருணாநிதி மாறியதற்குக் காரணமாக சனி தோஷத்தைக் குறிப்பிட்டனர். இருப்பினும் திமுக வட்டாரம் இதை மறுத்து வந்தது.

குடும்பத்தாரின் அறிவுறுத்தல்...
இருப்பினும் கருணாநிதி கருப்புச் சட்டைக்கு விடை கொடுக்கக் காரணம் அவரது குடும்பத்தாரின் அறிவுறுத்தல்தான் காரணம் என்கின்றனர். கருப்புச் சட்டையுடன் கட்சியினர், உறவினர்கள் திருமணத்திற்குப் போவது சரியாக இருக்காது. நல்ல நிகழ்ச்சிகளுக்கு கருப்பு சட்டையுடன் போவது சரிப்படாது என்று அவர்கள் எடுத்துரைத்த காரணத்தால்தான் கருப்புச் சட்டையை கருணாநிதி கைவிட்டு விட்டதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications