குழந்தைகளிடம் செக்ஸ் முறைகேடு: தலைமறைவாக உள்ள ராபின்சனுக்கு பிடிவாரண்ட்
நெல்லை: நெல்லையில் குழந்தைகளுக்கான இல்லம் நடத்தி வந்த ஜோனாதான் ராபின்சன் மீது குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார் உள்ளது. இந்த வழக்கில் ராபின்சன் தற்போது தலைமறைவாக உள்ளார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரை அடுத்த சின்னாம்மாள்புறத்தில் கிரெயில் டிரஸ்ட் சில்ட்ரன் ஹோம் என்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வந்தது. இதை இங்கிலாந்தை சேர்ந்த ஜோனாதான் ராபின்சன் என்பவர், வெளிநாட்டினர் அளிக்கும் பண உதவியுடன் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிகுரன் மற்றும் சுகந்தி சைஜூ ஆகியோர், கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி திருநெல்வேலி குழந்தைகள் நல வாரியத்திடம் ஒரு புகார் ஒன்றை அளித்தனர். இதில் கிரெயில் டிரஸ்ட் இல்லத்தில் குழந்தைகளுக்கு ஜோனாதான் ராபின்சன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து திருநெல்வேலி குழந்தை நலவாரியம், நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திராவிடம் புகார் அளித்தது. இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, எஸ்.பி உத்தரவிட்டார். இது குறித்து விசாரிக்க ஜோனாதான் ராபின்சன் நடத்தி வந்த குழந்தைகள் இல்லத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போதே ஜோனாதான் ராபின்சன் தலைமறைவாகிவிட்டார்.
அவரால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவனை மீட்ட போலீசார், குழந்தைகள் நலவாரியத்திடம் ஒப்படைந்தனர். இது குறித்து தலைமறைவாக உள்ள ஜோனாதான் ராபின்சன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் ராபின்சனின் பாலியல் தொந்தரவிற்கு உள்ளான சிறுவன் 9ம் வகுப்பு படித்து வருவதும், இந்தச் சிறுவனை வள்ளியூரில் இருந்து டெல்லி, சிம்லா போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று ராபின்சன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த வள்ளூயூர் குற்றவியல் நீதிமன்றம், தலைமறைவாக உள்ள ராபின்சனுக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications