ஆளும் கட்சியே 'எழுவாய், பயனிலை, செயப்படு பொருள்' கிடையாது: ஸ்டாலின் 'இலக்கண' பேச்சு!

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: பூனை, தனது குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வதைப் போல ஆளும்கட்சி, எதிர்க்கட்சியை நடத்த வேண்டுமே அன்றி; பூனை எலியைக் கவ்விக் கொண்டு செல்வதைப்போல இருக்கக்கூடாது என்று சட்டசபையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று நடந்த தமிழக சட்டசபைக் கூட்டத்தில் 19வது சபாநாயகராக தனபால் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவரை வாழ்த்தி ஸ்டாலின் பேசியதாவது,

14வது சட்டப்பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வாழ்த்தி வரவேற்பதில் மனமகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் இந்தப் பேரவைக்குப் புதியவரல்ல. தாங்கள் பெற்ற உயர் கல்வியின் மூலம் அறிவாற்றலைப் பெற்றிருப்பவர்கள் நீங்கள். எனவே இந்தப் பேரவையை வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான அனுபவத்தையும், அறிவாற்றலையும் அவற்றின் வாயிலாக உயர்ந்த அணுகுமுறையினையும் நீங்கள் கைவரப் பெற்றிருப்பதாகவே நாங்கள் பெரிதும் நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் அருந்ததியர் சமுதாயத்தின் பிரதிநிதியாக வாய்த்திருப்பது உங்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பேரவைக்கும் கூடுதல் பெருமையாகும். அருந்ததியர் சமுதாயம், அழுத்தப்பட்ட சமுதாயம் மட்டுமல்ல, எங்களின் உணர்வுகளில் ஆழப் பதிந்திருக்கும் சமுதாயமும் ஆகும். தலித் சமுதாயம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஆசனத்தை அலங்கரிப்பது தந்தை பெரியாரின் தமிழ் மண்ணுக்கு, மதிப்புக்கூட்டிடும் ஒரு நிகழ்வாகும்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது, கருத்துக்களை வெளிப்படுத்த எந்த அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் சட்டப்பேரவை ஜனநாயகத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியே அனைத்தும்; எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என எல்லாமே ஆளும் கட்சிதான் என்று எண்ணுவதும், நடப்பதும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படை ஆகாது.

அந்த மாதிரியான நோக்கும் போக்கும் சர்வாதிகாரத்திற்கே இட்டுச் சென்றுவிடும் என்ற பேராபத்தை உணர்ந்து நடந்து கொள்வதே, நாளைய சமுதாயத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான 3 பண்பட்ட வழியாகும்.

இந்த பயமும், நேர்மையும் நம் எல்லோரது உள்ளங்களிலேயும் நிறைந்திருந்தால்தான் ஜனநாயகச் சோதனையில் ஈடுபட்டுள்ள நாம், சரித்திரம் போற்றும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிட முடியும்.

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ள உறவு மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளைத் தோழர்களுக்கும் உள்ள உறவு போல இருக்க வேண்டுமென்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. நம் கையில் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் என்று தனித்தனியாக இருப்பதைப்போல, பல கட்சிகள் ஆளும் கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் என்று இருந்தாலும், அந்தக் கட்சிகள் எல்லாம் நாட்டு நலன் என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். தனித்தனியே இருக்கும் விரல்கள் எதைச் செய்தாலும் ஒன்று சேர்வதைப்போல,என்று அழகான உவமையோடு சுட்டிக் காட்டினார் அறிஞர் அண்ணா.

பூனை, தனது குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வதைப் போல ஆளும்கட்சி, எதிர்க்கட்சியை நடத்த வேண்டுமே அன்றி; பூனை எலியைக் கவ்விக் கொண்டு செல்வதைப்போல இருக்கக்கூடாது என்று விளக்கியவர் எங்கள் தலைவர் கலைஞர்.

ஆளுங்கட்சியோடு எதிர்க்கட்சிகளும் இருந்து இணைந்து நடத்துவதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை இலக்கணம். பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் உங்கள் பொறுப்பினை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகவே இருக்கிறது என்ற உறுதியினை உங்களுக்குக் கொடுத்து, உங்களை மீண்டும் ஒருமுறை வரவேற்று வாழ்த்துகிறேன் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+