மின்வெட்டு நீடித்தால் உங்கள் 'பவர்' கட்டாகிடும்... போராட்டம் நடத்தப் போறேன்: விஜயகாந்த் எச்சரிக்கை

நாகர்கோவிலில் தேமுதிகவின் 8-ம் ஆண்டு விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:
தமிழகத்தில் தொடரும் மின்வெட்டால் தொழில்கள் முடங்கிப் போய்விட்டன. மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளுமே மக்கள் பிரச்சனைகளைத் தட்டிக் கழிக்கின்றன.
தற்போதைய மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வுகாணாவிட்டால் மக்கள் உங்களது பவரை கட் செய்துவிடுவர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது உடன்குடியில் மின்திட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தார். அத்திட்டம் என்ன நிலையில் உள்ளது இந்த மின்வெட்டு தொடர்ந்தால் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வேன்.
தமிழகத்தில் பல கோடிக்கு கனிமவளம் கொள்ளைபோய் உள்ளது. கூடங்குளம் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர்.முதல்வர் அந்த மக்களை நேரில் வந்து சந்திக்கவில்லை. மக்களின் அச்சம் போக்கப்படும் என முதலில் கூறிய தமிழக முதல்வர், இப்போது அமைதி காத்து வருகிறார். அண்டை மாநில முதல்வர்களிடம், சுமுக உறவில் தமிழக முதல்வர் இல்லை. இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.
சென்னையில் மட்டும் தினமும் 1 மணி நேரம் மின் வெட்டு செய்கிறார்கள். ஏன் மற்ற மாவட்டங்களில் மக்கள் இல்லையா? பால்விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு சங்கரன்கோவில் இடைத் தேர்தலை சந்திக்கிறேன், மோதிப் பார்க்க தேமுதிக தயாரா? என்று கேட்டாங்களே? அதே சவாலை நான் விடுகிறேன். ஆட்சியை கலைத்து விட்டு இப்போது தேர்தலுக்கு வாங்க பார்ப்போம்.
கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டுவரை மின்சாரத்துக்கான திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை. மக்களுக்கு மின்சாரம் கிடையாது. ஆனால் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஏன் எங்கள் மக்கள் இளிச்சவாயர்களா?
கூடங்குளம் மக்களின் பயத்தை போக்க சொன்னேன். முதல்வர் அங்கு சென்று பேசினாரா? அப்துல்கலாம் கூறியதையாவது செய்தார்களா? அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ஜனதா எல்லா கட்சிகளும் ஏமாற்றிவிட்டன.
காமன்வெல்த் ஊழல், சுரங்க ஊழல், ஆதர்ஷ் ஊழல் என மத்திய அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. போதாக் குறைக்கு இந்திய மக்களை மாங்காய் மக்கள் என ராபர்ட் வதேரா கூறுகிறார். தமிழ்நாட்டில் மின்சார தடையால் மக்கள் கொசுக்கடிக்கு ஆளாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவாரம் பார்ப்போம். இல்லாவிட்டால் போராட்டம்தான். அந்த போராட்டத்துக்கு தமிழக மக்கள் திரண்டு வர வேண்டும்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் அறிவிக்கப்பட்ட 1 மணி நேர மின்வெட்டு தான் நிலவுகிறது. கேரளாவும், கர்நாடகாவும் தமிழகத்தை வடிகாலாக நினைக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை அதிகமாக நடப்பதற்கு காரணம் மின்வெட்டு தான்.
தமிழக மக்களை என்னால் சந்தோஷமாக வைத்திருக்க முடியும். ஆகவே, மக்களே ஒருமுறை நன்றாக சிந்தித்து முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பிற கட்சிகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications