ஈரான், கத்தார், துபாய், செளதி சிறைகளில் 79 தமிழக மீனவர்கள்: அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: ஈரான், கத்தார், துபாய், சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள 79 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
கேள்வி: தமிழக மீனவர்கள் ஈரான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலே உள்ள சிறைச்சாலைகளில் பல நாட்களாக வாடிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?.
பதில்: ஈரான் நாட்டு அதிகாரிகளால் தமிழகத்தை சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டின் ஒரு தீவிலே உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குக்கூட இதுபற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதைப்போலவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டில் இருந்து கத்தார் நாட்டு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த 29 மீனவர்கள் துபாயில் இருந்தும், கத்தாரில் இருந்தும் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஈரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையிலே வைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை பற்றி மட்டுமே இதுவரை அக்கறை செலுத்தி வந்த நாம், இவர்களை பற்றியும் அக்கறை செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இவ்வாறு சிறையிலே அவதிப்படும் 79 தமிழக மீனவர்களையும் விரைவில் மீட்டு, தமிழகத்திற்கு அனுப்பி வைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் அவர்களை பற்றி அக்கறையோடு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
கேள்வி: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் டெல்லியில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனையும் சந்தித்து உரையாடியது பற்றி?
பதில்: வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வரும் ராணுவமயமாக்கலை தடுப்பதற்கு இந்திய அரசு, இலங்கை அரசுக்கு முறைப்படி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டிய இலங்கை அரசு, 13வது திருத்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையே பறித்து வருவதாகவும் அவர்கள் இந்திய அரசிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
2011ம் ஆண்டு அரசாங்கத்துடன் ஓராண்டு காலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் 2012 ஜனவரி மாதத்தில் இலங்கை அரசு இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொண்டதாகவும், அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறையற்ற தன்மையோடுதான் இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வு கோருகின்ற இந்த நேரத்தில், இலங்கை அரசு அவசர சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் பறித்து வருவதாகவும் அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் கவுரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இதில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்றும் உறுதியளித்ததாகவும், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது நமக்கு மன நிறைவை தருகிறது.
"டெசோ'' மாநாட்டில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்துமே இந்த கருத்துக்களை உள்ளடக்கித்தான் அமைந்திருக்கின்றன. அந்தத் தீர்மானங்களை இந்திய அரசும், ஐ.நா.மன்றமும் முன்வந்து நிறைவேற்றினாலே இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு பெருமளவுக்கு தீர்வுகாண முடியும் என்பது எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications