நெல்லையில் பெண் போலீஸூக்கு தொல்லை கொடுத்த ஏட்டு சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லையில் பெண் போலீஸூக்கு தொல்லை கொடுத்த ஆயுதப்படை ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாளைங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டான்லி ராஜ். இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரிகிறார். இங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் காவலராக பணியாற்றுகிறார்.
ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் இருவரும் பணி நிமித்தம் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். மேலும் ஜாஸ்மின் தன்னுடன் பணிபுரியும் மற்ற ஆண் காவலர்களுடனும் பேசி வந்தார். இதற்கு ஸ்டான்லி ராஜ் எதிர்ப்பு தெரிவித்து, என்னை தவிர மற்றவர்களுடன் பழக கூடாது என்று கண்டித்தார்.
இதனால் ஸ்டான்லி ராஜிடம் பேசுவதை ஜாஸ்மின் தவிர்த்தார். இதற்கிடையே ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந் நிலையில் ஆயுதப்படை வளாக குடியிருப்பில் ஜாஸ்மின் தங்கியுள்ள வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்ற ஸ்டான்லி ராஜ், என்னை தவிர வேறு யாருடனும் பேச கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்தார்.
இது குறித்து எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஸ்டான்லி ராஜ் மீதான புகார் உண்மையானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. விஜேயந்திர பிதாரி உத்தரவிட்டார். ஸ்டான்லி ராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.
இதேபோல் நெல்லை மாநகர ஆயுதப்படையில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்பட்ட மற்றொரு புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆயுதப்படை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications