காதல் பிரச்சனை: தங்கை திருமணத்தில் பெண் போலீசுக்கு அரிவாள் வெட்டு-5 பேருக்கு வலைவீச்சு
புதுக்கோட்டை: காதல் பிரச்சனையில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த 5 பேர் கொண்ட கும்பல், கர்ப்பணியாக இருந்த பெண் போலீஸ் மற்றும் அவரது உறவினரை அரிவாளால் தாக்கியது. இது தொடர்பாக தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை வடவாளத்தை அடுத்த சின்னையாசத்திரம் என்ற பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உத்தமி(25). திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸாக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது கர்ப்பணியாக உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தமியின் தங்கையை, திருவரங்குளத்தை அடுத்த வாண்டாக்கோட்டையை சேர்ந்த மனோகரன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியில் வசித்து வந்த உத்தமியின் குடும்பத்தினர், இது தொடர்பாக மனோகரனை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் உத்தமியின் தங்கைக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த மனோகரன், நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பர்கள் 5 பேருடன் திருமணம் நடைபெற இருந்த வீட்டிற்கு வந்தனர்.
அங்கு திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த உத்தமியிடம், அவரது தங்கை எங்கே என்று அந்த கும்பல் கேட்டது. இதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோகரனுடன் வந்த கும்பலில் இருந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தமியை தாக்கினார்.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த உத்தமியின் அக்காள் கணவர் வீரமணி(32), அந்த கும்பலை தடுக்க முயன்றார். இதையடுத்து அவரையும், அந்த கும்பல் அரிவாளால் தாக்கியது. அதற்குள் அப்பகுதியினர் அங்கு கூடியதால், மனோகரனுடன் வந்த கும்பல் அப்பகுதியில் இருந்து தப்பியோடியது.
இதையடுத்து காயமடைந்த உத்தமி மற்றும் வீரமணியை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து உத்தமி அளித்த புகாரின் போரில், வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் நடைபெற இருந்த வீட்டிற்கு வந்து அரிவாளால் தாக்கிய மனோகரன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்தமியின் தங்கை திருமணத்தை தடுக்க வந்த கும்பலின் முயற்சி தோல்வி அடைந்ததால், நிச்சயிக்கப்பட்டபடி நேற்று திருமணம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications