நெல்லையில் குத்தி கொலை செய்யப்பட்ட எஸ்ஐ உடல்-30 குண்டுகள் முழங்க அடக்கம்
நெல்லை: திருப்பச்சோந்தி அருகே கலவர கும்பலால் குத்தி கொல்லப்பட்ட திசையன்விளை எஸ்ஐ உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கைசாலபுரத்தை சேர்ந்தவர் தவசிபால் மகன் ஆல்வின்சுதன். பிஎஸ்சி பட்டதாரியான இவர் எஸ்ஐ தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஒரு ஆண்டிற்கு முன் சங்கரன்கோவில் தாலுக்கா காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்ஐயாக பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் திருபச்சோந்தி காவல் நிலையத்துக்கு எஸ்ஐயாக மாற்றப்பட்டார்.
நேற்று முன்தினம் மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு திருப்பச்சோந்தி அருகே வேம்புத்தூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆல்வின் சுதன், ஒரு கும்பலால் குத்தி கொல்லப்பட்டார்.
கொலையான எஸ்ஐ ஆல்வின் சுதன் உடல் வேன் மூலம் சொந்த ஊரான திசையன்விளை கைசாலபுரத்திற்குகொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டு முன் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. உடலை பார்த்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உடல் அருகே உள்ள கிருஸ்துவ ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இறுதி பிரார்த்தனைக்கு பிறகு ஆல்வின் உடல் வேனில் அங்குள்ள கல்லரை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன், கலெக்டர் செல்வராஜ், எஸ்பி விஜேயந்திர பிதாரி, மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உள்பட முக்கிய போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications